மனித கடத்தலில் சிக்கிய மியான்மரிகளை திருப்பி அனுப்ப தாய்லாந்து ஒப்புதல்
மனித கடத்தல்காரர்களால் மியான்மரிலிருந்து தாய்லாந்துக்கு அழைத்து வரப்பட்ட 700க்கும் மேற்பட்ட மியான்மரிகள் தாய்லாந்து அரசின் பிடியில் இருக்கின்றனர். இவர்களை திருப்பி அனுப்ப தாய்லாந்து அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
சுரண்டலுக்கு உள்ளான தொழிலாளர்களாக, பிச்சை எடுப்பவர்களாக, பாலியல் அடிமைகளாக இருந்து தாய்லாந்து அரசால் மீட்கப்பட்ட மியான்மரிகள் இதன் மூலம் நாடு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தாய்லாந்து- மியான்மர் இடையே ‘கடத்தலில் சிக்கியவர்களை திருப்பி அனுப்புவது மற்றும் சமூகத்தில் மீண்டும் இணைப்பது’ தொடர்பான 23வது கூட்டம் நடைபெற்றதன் பின் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
“லாவோஸ், கம்போடியா நாட்டவர்கள் தாய்லாந்துக்கு கடத்தப்படுவதை காட்டிலும் மியான்மரிகள் கூடுதலாக கடத்தப்படுகின்றனர்,” என தாய்லாந்து ஆட்கடத்தல் தடுப்பு பிரிவின் இயக்குனர் சுனே ஶ்ரீசங்கடிராகுல்லர்ட் தெரிவித்திருக்கிறார்.
மியான்மரிகளை திருப்பி அனுப்பும் பணி, மூன்று கட்டங்களாக நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இவர்களுடன் முறையான ஆவணங்களின்றி மலேசியா செல்ல முயன்ற மியான்மரிகளும் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து- மியான்மர் இடையே உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், சட்டவிரோதமாக வரும் தொழிலாளர்கள் சிறைத்தண்டனையின்றி மியான்மருக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.
கடத்தலில் சிக்கியவர்களை திருப்பி அனுப்புவதை தொடர்பாக ஒவ்வொரு ஆறு மாதமும் இரு நாட்டுக்கு இடையே சந்திப்பு நடைபெறுகின்றது.
இன்றைய நிலையில், தாய்லாந்தில் 49 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் மியான்மரிலிருந்து மட்டும் மாதம் 20 ஆயிரம் தொழிலாளர்கள் சட்டரீதியாக தாய்லாந்துக்கு செல்கின்றனர். அதே போல், தாய்லாந்துக்கு அருகாமையில் உள்ள ஏழ்மை நாடுகளிலிருந்து சட்டவிரோதமான முறையில் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் தாய்லாந்துக்கு செல்வது தொடர் நிகழ்வாக இருந்து வருகின்றது.
0 comments :
Post a Comment