உடையுமா கிழக்கு உதயம்? துணைபோகின்றதா கிழக்குக்கான அரசியல் கட்சி ?
கிழக்கு உதயம் என்கின்ற அமைப்பு 2004ம் ஆண்டு இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை சுனாமி பேரலை தாக்கியபோது, கிழக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கென சுவிட்சர்லாந்தில் உருவானது. கிழக்கு என்ற தமது அடையாளத்தை வெளிப்படுத்தினால் துரோகிகள் அல்லது பிரதேசவாதிகள் என முத்திரை குத்தப்படுகின்றதோர் அபாயமான காலகட்டத்தில்தான் உதயம் உருவானது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம் என்ற அவசர அழைப்புடன் அந்த அமைப்பு ஆரம்பமாகியிருந்தாலும், கிழக்குக்கென்று தனித்துவமான சுயாதீனமான தலைமைத்துவம் ஒன்று வேண்டும், எம்மால் தனித்து இயங்கமுடியும், தொடர்ந்தும் எம்மை யாழ் மேலாதிக்க சக்திகள் ஆட்சி செய்ய அனுமதிக்கமுடியாது என்கின்ற ஏகப்பட்ட உள்ளக்கிடக்கைகளின் வெளிப்பாடகவே உதயம் உருவானது. கிழக்கு என்ற பெயரை கம்மீரமாக கூறிக்கொண்டு, ஆம்! எங்களாலும் முடியும் என்று ஆரம்பமான முதலாவது அமைப்பு கிழக்கு உதயம் என்றும் அடையாளப்படுத்தலாம்.
புலிகள் அமைப்பிலிருந்து தனது சொந்த காரணங்களுக்காக பிரதேசவாத போர்வையை போர்த்துக்கொண்டு கருணா வெளியேறியிருந்தபோது, யாழ் மையவாத பிற்போக்குவாதிகளின் பார்வை ஒட்டுமொத்த கிழக்கு மக்கள் மீதும் திரும்பியிருந்த காலகட்த்தில் உதயம் பிரகாசமாக உதயமானது. உதயத்தின் தோற்றத்திற்கு எதிராக எழுந்த அத்தனை சவால்களையும் அது எதிர்கொண்டது. இச்சவால்களை எதிர்கொள்வதில் அந்த அமைப்பை உருவாக்க உறுதுணையாக நின்ற கிழக்கின் மக்கள் உறுதியுடன் செயற்பட்டார்கள். அவ்வாறு அவர்கள் செயற்பட்டமைக்கான முதன்மைக் காரணம் ஏலவே குறிப்பிட்டதுபோல் கிழக்கின் மக்களுக்கு உதவவேண்டும் என்ற விருப்புக்கு சமாந்தரமாக கிழக்கின் தனித்துவம் தொடர்பான அவர்களது உள்ளக்குமுறல்களுமாகும்.
துரோங்களாலும் துரோகிகள் என்ற போலி முத்திரை குத்தல்களாலும் சாபக்கேடுக்குள்ளான எமது சமூகத்தில் பொதுநோக்குடன், அதுவும் பாமரமக்களின் எதிர்கால விடிவுக்காக செயற்படுவதும் துரோகமே. கட்சிகளும் அமைப்புக்களும் மக்களுக்காக என்பதிலிருந்து விலகி அவை தலைவருக்காகவும் தலைமைக்காகவுமே என்ற அச்சுறுத்தலிலிருந்து உதயத்தாலும் தப்பித்துக்கொள்ள முடியவில்லை.
ஆம், நடந்தது! குறுகிய காலத்தில் உதயம் உடைந்தது யாழ் மையவாத பாசிஸ தலைமையின் நிகழ்சி நிரலில் அதன் அடிவருடிக்கும்பலொன்ன்று உதயத்தை உடைத்து புதிய அமைப்பொன்றை உருவாக்கி கொண்டனர். உதயத்தின் மக்கள் பலம் குன்றியது. செயற்பாடுகளின் தாக்கம் தணிந்தது. நிர்வாகச் சிக்கல்கள் உருவானது. மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் உருவானது. இவை அத்தனைக்கும் மத்தியில் உதயத்தின் இயங்கு சக்திகளான மக்களின் பலத்துடன் அது 15 வருடங்களாக முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த நகர்வு ஆரம்ப வேகத்திலும் மிகக்கம்மியாகவே அமைந்திருந்தது என்பதை பதிவு செய்தே ஆகவேண்டும்.
மேற்குறிப்பிட்டவை யாவும் இறந்தகாலம். ஆனால் எதிர்காலம் இறந்தகாலத்திலும் பார்க்க ஆபத்தான திசையை நோக்கி நகர்கின்றது என்ற அடிப்படையில் சில விடயங்களை வெளிப்படையாக மக்களின் ஆய்வுக்கு விடலாம் எனக் கருதுகின்றேன்.
கடந்த சில வருடங்களாக உதயத்தின் நிர்வாகத்தினுள், குறிப்பாக நிர்வாக சபை உறுப்பினர்களுள் உருவாகியுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் ஒரு பொது அமைப்பை, விசேடமாக உதவிகள் தேவைப்படும் ஒரு தொகுதி மக்கள் பயனடைகின்ற அமைப்பை உடைத்து மேலும் பலவீனமடையச் செய்யக்கூடிய நிலைக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. இக்கட்டுரையின் நோக்கம் நபர்களைச் சாடுவது அல்ல என்பதாலும் உடைவை தடுத்து நிறுத்தி இதுவரை செய்யப்பட்ட பணி தொடர்ந்தும் மேலதிகவேகத்துடன் இடம்பெறவேண்டும் என வலியுறுத்துவது என்பதாலும் மேலோட்டமாக சில விடயங்களை தொட்டுச்செல்லலாம் எனக் கருதுகின்றேன்.
நிதிநிர்வாகத்திற்குரிய பொறுப்புக்கூறல்கள் இதுவரை சரியாக இடம்பெறாதன் காரணமாக நிலைமை மோசமடைந்துள்ளது என்ற முடிவுக்கு இலகுவாக வரக்கூடியதாகவுள்ளது. பொதுமக்களின் பணத்திற்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் அதற்கு கட்டுப்படாது செல்வதற்கு எமது அரசியல் மற்றும் ஆயுதக்கலாச்சாரங்கள் வழிவிடுகின்றது அல்லது துணை நிற்கின்றது என்ற குற்றச்சாட்டை உதயத்தின் உயிர்நாடியாக இருக்கக்கூடிய பொதுமக்கள் வாயிலாக அறியக்கூடியதாகவுள்ளது.
குறிப்பாக நிதிநிர்வாகத்திற்கு பொறுப்பானவரிடம் பொறுப்புக்கூறல் என்ற கருமத்திலிருந்து தாங்கள் விடுபடமுடியாது என்று மக்கள் வலியுறுத்துகின்றபோது, அரசியல் கட்சி ஒன்று அவர் எங்களுடைய ஆள் என்று மிரட்டுகின்ற நிலைமை உருவாகியுள்ளதாக அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் வெளிப்படையாக குறிப்பிடுவதானால் உதயத்தின் முன்னணிச் செயற்பாட்டாளரான பெண் ஒருவரை அரசியல் கட்சி ஒன்றின் பெண்கள் அணிப்பொறுப்பாளர் மிரட்டியதாக அறியமுடிகின்றது. இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னரும் பல்வேறு வடிவங்களில் இடம்பெற்றதாகவும் அதற்கும் குறித்த அரசியல்கட்சியே பொறுப்புக்கூறவேண்டும் என்றும் மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
இச்செயற்பாடானது அக்கட்சியின் பொதுமக்கள் மீதான அக்கறையைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. கட்சிகள் பொது அமைப்புக்கள் மக்களுக்கானவை என்பதையும் அவை தனிநபர்களுக்கானவை அல்ல என்பதையும் குறித்த கட்சி ஏற்றுக்கொள்ளவேண்டும். நிதிநிர்வாத்திற்கு பொறுப்பானவர் கட்சியின் விதிமுறைகளுக்கு கட்டுப்படாது செயற்படுகின்றபோது, அவர் மக்களுக்கு பொறுப்புக்கூறவேண்டியவர் என்பதையும் நிர்வாக விதிகளுக்கு கட்டுப்படவேண்டியவர் என்பதையும் வலியுறுத்துவதை விடுத்து அவரை விடுங்கள் அவர் எங்களுடைய ஆள் என்பது அக்கட்சி மீது மக்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைக்கு குந்தகமாக அமையலாம்.
எனவே குறித்த அரசியல் கட்சி கிழக்கு மக்களின் மேம்பாட்டில் அக்கறைகொண்டதாகவிருந்தால் உடனடியாக அமைப்பு உடைந்து பலவீனமடைவதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டாலும் நிதிக்குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள நபரை அரவணைத்து தஞ்சம் வழங்குவதை தவிர்க்கவேண்டும்.
அத்துடன் அமைப்பினுள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்த்துகொண்டு உடைவினை தவிர்த்து முன்நோக்கி நகர்வதற்கான முயற்சிகள் உடனடியாக இடம்பெறவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment