Monday, August 5, 2019

தமிழரின் வரலாறு நாமலுக்கு தெரியாதென்ற மாவைக்கு மாவையின் வரலாற்றை போட்டுடைக்கின்றார் நாமல் ராஜபக்ச.

அண்மையில் யாழ்பாணம் சென்றிருந்த நாமல் ராஜபக்ச தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். குறிப்பாக அவர்கள் தமிழ் மக்களுக்காக செயற்படவில்லை என்றும் தங்களது சுயலாபங்களுக்காக தமிழ் மக்களை பகடைகாய்களாக பயன்படுத்துகின்றனர் என்றும் தெரிவித்திருந்தார்.

நாமல் ராஜபக்சவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க முடியாத மாவை நாமல் ஒரு சின்னப்பையன் என்றும் அவருக்கு தமிழரின் வரலாறு தெரியாது என்றும் தெரிவித்திருந்தார். அதைதொடர்ந்து சிறிதரன் சரவணபவான் போன்றோரும் எதிர்கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்

இவர்களின் கூற்றுக்களுக்கு பதிலளித்துள்ள நாமல் ராஜபக்ச அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் :


எம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒரு முறை தம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதை விடுத்து நான் யாழ்ப்பாணம் சென்று மக்களை சந்தித்து வந்த பின் எம்மை பற்றி விமர்சிக்க அவர்களிற்கு என்ன தகுதி உள்ளது என்ற கேள்வி எழுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷாவின் புதல்வரான எனக்கு தமிழர் வரலாறு தெரியாது என்றும் நானொரு சின்னப்பையன் என்றும் மாவை சேனாதிராஜா ஐயா கூறியுள்ளார்.

அது உண்மைதான் அவரின் வயதுடன் ஒப்பிடும் போது நான் சின்னப் பையன் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தமிழர்கள் அவதியுற்ற காலத்தில் தனது குடும்பத்தை இந்தியாவில் பாதுகாப்பாக வைத்ததுடன் அவரது மகன் கலையமுதனை லண்டனில் படிக்க வைத்து விட்டு பயங்கரவாதத்தினை நாம் ஒழித்த பின்னரே மாவட்ட புரத்தில் அரண்மனை கட்டி குடும்பத்துடன் குடியமர்ந்தார். துற்போது கூட அவரது மகள் இந்தியாவில் மருத்துவம் படித்துக்கொண்டிருக்கின்றார்.

மாவை ஐயா, அவர்களின் பிள்ளைகளிற்கு இலங்கைத் தமிழர் போன்று சரி வர தமிழ் மொழி கூட கதைக்கத் தெரியாது. இவ்வாறான நிலையில் தான் இலங்கையர் என்ற அடையாளத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற இலக்குடன் எம்மீது விமர்சனம் வைக்கின்றார். முதலில் அவர் தனது பிள்ளைகளுக்கு சரியாக இலங்கைத் தமிழர் வரலாற்றை கற்பித்து விட்டு பின்னர் என்னைப்பற்றி விமர்சிப்பதே சாலச்சிறந்ததாகும்.

அடுத்து, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவனும் சிறிதரனும் எம்மீது விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். இவர்களுக்கு எம்மீது விரல் சுட்டுவதற்கு என்ன தகுதி உள்ளது.

சரவணபவன் 1989 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் முழுவதையும் சப்பரா எனும் நிதி நிறுவனம் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றி பல கோடிகளை மோசடி செய்துள்ளார்.

வடக்கில் பல தமிழர்களின் தற்கொலைக்கு காரணமாக இருந்துள்ளார். தீவிர தமிழ்த் தேசியவாதியாக தன்னை அடையாளப்படுத்தும் அவர் தனது மகளின் 18 ஆவது பிறந்தநாளிற்கு ஜனாதிபதி மைத்திரி மற்றும் பல அரசியல் பிரமுகர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தவர். அன்று தீர்வு பற்றியோ அல்லது அல்லல்படும் மக்களின் வாழ்வாதார விடயங்கள் பற்றியோ தமிழ் கைதிகள் பற்றியோ ஜனாதிபதியுடன் கதைத்திருக்கலாமே. ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயங்கு நிலை முடக்கப்பட்டதன் பின்னர் தன்னை விடுதலைப்புலிகளின் தலைவருக்கு அடுத்தபடியாக கற்பனை செய்துகொண்டிருக்கின்றார். இவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இருந்த ஒரேயொரு தொடர்பு தீபனின் தங்கையை திருமணம் முடித்தது மட்டும் தான். தனது மச்சானான தீபன் உயிரிழக்கும் வரை அவருடன் உரையாடியது கூட இல்லை. உயிரிழந்த பிறகு கூட அவருடைய நினைவேந்தலையே மேற்கொள்ளவதை தவிர்த்து வரும் ஒருவராக உள்ளார். இது தான் விடுதலைப்புலிகளுடனான அவரின் உறவாகும். ஆனால் தமிழ் மக்களை குழப்புவதற்காக புலிவாலை பிடித்தவராக காண்பிக்க முற்படுகின்றார்..

அதுமட்டுமன்றி அன்று விடுதலைப்புலிகளே அரவணைத்து கிளிநொச்சி உட்பட வன்னி எங்கும் குடியேற்ற மலையக வாழ் மக்களை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பார்த்து அவர்களை வார்த்தைகளால் வஞ்சித்துள்ளார். தற்போதும் அந்த மக்களின் மனதில் அவ்விடயம் வடுவாகி அவர்கள் வேதனைப் படுவதை நான் நேரடியாகவே அறிந்திருக்கின்றேன். அது மட்டுமா கிளிநொச்சி இரணைமடு நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதில் இரட்டைவேடம் போட்டவர்..

கட்சிக்குள் கடுமையான சாதியத்தையும் பிரதேசவாதத்தையும் பார்க்கும் கீழ் மட்ட அரசியல்வாதிகளான சிறிதரன் போன்றவர்களுக்கு எம்மை விமர்சிக்க என்ன தகுதி இருக்கின்றது..

எம்மைப் பார்த்து விரல்களை நீட்டுவதற்கு முன்னர் தமிழ் மக்களிற்கு தாங்கள் சிறந்த தலைவர்களாக இருக்கின்றோமா என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். இப்படியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது வருகையை கண்டு கொதிப்பதை விட மக்களுக்கு இதய சுத்தியுடன் நேர்மையாக இருக்க முற்பட வேண்டும். தமது வாக்கு வங்கிக்காக பொய்யான வாக்குறுதிகளையும் போலித் தமிழ்த் தேசியத்தினையும் விதைப்பதற்கு முற்படக் கூடாது என அறிக்கையில் தெரிவிக்க்பபட்டிருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com