Saturday, August 10, 2019

சித்தார்த்தன் கோத்தாவை ரகசியமாகவே சந்தித்தாராம்! விருப்பு வாக்குக்கு வழிசெய்கின்றார் சுமந்திரன்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படவுள்ள கோத்தபாயவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் சந்தித்திருந்தார். இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தமை யாவரும் அறிந்தது.

இந்நிலையில், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை இரகசியமாகவே சந்தித்தார். அது தொடர்பான தகவல்கள் வெளிவந்ததும் அதனை அவர் ஒப்புக்கொண்டார்.'

என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறையில் ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் திறக்கும் நிகழ்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது அரசியல் சூட்சிகளின் அரங்கமாகும். ஒருவரை ஒருவர் இழுத்து வீழ்த்துவற்கும் மேலேறி மிதித்துச் செல்வதற்கும் பெயர்போன இடமாகும். சித்தார்த்தனின் சந்திப்பு இரகசியச் சந்திப்பு என்பதையும் ஊடகங்கள் அறிந்தபின்னர் அவர் அதனை ஏற்றுக்கொண்டார் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

ஆனால் அந்த இரகசியச் சந்திப்பை பரகசியமாக்கியது யார்? விருப்பு வாக்குகளுக்காக தமக்குள்ளே முட்டிமோதிக்கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே ஊடகங்களுக்கு தகவலை வழங்கியதாக இலங்கைநெட் அறிகின்றது.

இதேநேரம் சுமந்திரன் கோத்தபாயவைச் சந்தித்து பேசியுள்ளார். ஆனால் அவரது சந்திப்பு சித்தார்த்தனது சந்திப்பிலும் முற்றிலும் வேறுபட்டது. அதாவது அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் உளவாளியாகவே கோத்தாவை சந்தித்துள்ளார். கோத்தபாய தரப்பினரின் தேர்தல் வியூகங்கள் மற்றும் தமிழ் மக்கள் விடயத்தில் அவர்கள் எத்தகைய முடிவினை கொண்டுள்ளனர் என்பதை அறிந்து அதனை ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரிவித்து அதன் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் வியூகங்களுக்கு உதவுவதே அவரது நோக்கமாக அமைந்திருந்தது என்றும் இலங்கைநெட் அறிகின்றது.

No comments:

Post a Comment