Tuesday, August 20, 2019

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் சிராந்தி ராஜபக்ஷவாம்! ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கண்டுபிடிப்பு!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாராக கோத்தபாயவை அறிவித்திருந்தாலும் தேர்தல் நெருங்கியவுடன் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ரஜபக்ஷவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திமா கமகே தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரான சஜித் பிரேமதாசவினதும் பங்கேற்புடனேயே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் களமிறங்குவோம். இந்த விடயத்தில் ஐக்கிய தேசிய முன்னணிக்குள் எந்த முரண்பாடும் கிடையாது.

நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சியின் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த வேட்பாளர் சஜித் பிரேமதாசவாகவோ அல்லது வேறு ஒருவாராக இருந்தாலும் அவருக்கு எங்களின் முழு ஆதரவையும் வழங்குவோம். இருப்பினும் இதுவரையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட வில்லை. இவ்வாறானதொரு நிலைமையில் இரண்டு கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆகவே இதுவரை காலமும் சுதந்திரமாக கருத்து வெளியிட்ட வந்த ஊடகங்கள் எதிர்வரும் காலங்களில் கோத்தபாய கூறும் விடயங்களை மாத்திரமே வெளியிட வேண்டிவரும் என்பது உறுதி.

தற்போது அவரின் அமெரிக்க குடியுரிமை தொடர்பிலும் பிரச்சினை எழுந்துள்ளது. கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதில் இதுபோன்ற சவால்கள் தோன்றியிருக்கும் நிலையில் யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய தற்போது கோத்தபாய வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இறுதியில் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவே வேட்பாளராக களமிறங்குவார் என்று தெரியவருகிறது என்றார்.

-ஜ.மு

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com