Tuesday, August 6, 2019

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரியாக செயற்பட்டிருந்தால் குண்டு வெடித்திருக்காதாம். ருவன் விஜயவர்த்தன

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரியாக செயற்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற இந்த பயங்கரவாத தாக்குதலை தடுத்திருக்க முடியும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார்.

சஹரானினால் 17 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. குண்டுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பான தகவல்கள் எனக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயங்களை கண்டறியும் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் இராயாங்க அமைச்சர் இன்று சாட்சியமளித்தார். பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்று இடம்பொற்ற தெரிவுக்குழு அமர்வில் குழுவின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார்.

இந்தியாவில் பாதுகாப்பு தொடர்பில் விஷேட நடைமுறைகள் உண்டு. புலனாய்வு பிரிவு வழங்கும் தகவல்களை ஆய்வு செய்வதற்கு தனியான ஆய்வு பிரிவொன்று செயற்படுகின்றது. இவ்வாறாக பிரிவுகளை உள்ளடக்கிய தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டம் நடைபெறும். இதன் போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கிடைக்கப்பெற்ற குற்றப் புலனாய்வு தகவல்கள், மதிப்பீடு செய்யப்பட்ட ஆய்வுகள் தொடர்பிலான விடயங்கள் நாட்டு பிரதமருக்கு அதாவது இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் பிரதமருக்கு தெளிவு படுத்தப்படும்.

நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறுகியகாலத்துக்கு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும். இதே போன்று எதிர்வரும் 10 வருட காலத்திற்கு பாதுகாப்பு விடயங்கள் எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்தும் மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்படும். அது தொடர்பில் கலந்துரையாடல்களும் இடம்பெறும். இது போன்றே ஏனைய பல நாடுகளிலும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நடைமுறைகள் இருப்பதாக நான் அறிந்துள்ளேன் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவமானது நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான நீங்கள் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் தெரிவித்திருந்த கூற்றை நியூசிலாந்து பிரதமர் நிராகரித்திருந்தார் என்று தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார்.

தாக்குதல் தொடர்பாக நிஷாப் என்பவர் தனது மனைவியுடன் நடத்திய உரையாடலை அடிப்படையாக் கொண்டு புலனாய்வு பிரிவின் தகவலுக்கு அமைவாகவே இவ்வாறான கூற்றை தெரிவித்திருந்தேன் என்றும் அவர் கூறினார். மாவனெல்ல சம்பவத்தை சரியாக விசாரித்திருந்தால் உயிர்த்த ஞாயிறு சம்பவ தாக்குதலை தடுத்திருக்க முடியும்.

தாக்குதலுக்கு முன்னர் தாக்குதலுடன் தொடர்புபட்ட பாதுகாப்பு பிரிவினரால் எழுதப்பட்ட கடிதத்தை அதற்கு முன்னர் நான் அறியவில்லை, தாக்குதல் இடம்பெற்ற பின்னரே அதுபற்றி நான் அறிந்தேன்.

தேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. புலனாய்வு, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் கூட்டம் செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறுவது வழமை. இதில் நானும் பங்கேற்பதுண்டு. இந்த கூட்டங்களில் சஹ்ரானின் பயங்கரவாதம் தொர்பான தகவல்கள் பரிமாறப்படவில்லை.

அடிப்படைவாதம் பயங்கரவாத வன்முறையாக வளர்ச்சி அடையும் விடயம் குறித்தும் கருத்து பரிமாறப்படவில்லை என்று தெரிவித்த அவர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் முக்கியமான விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் ஏற்றபட்ட சிக்கல் நிலையையிட்டு தாம் கவலை அடைவதாகவும் குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 அல்லது 3 முறை பதில் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியுள்ளேன். பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே இந்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. இதே போன்று 2017 செப்டெம்பர் 17 ஆம் திகதியும் 2018 ஆம் ஆண்டும் 2019 ஆண்டு மே மாதம் 13 திகதியும் பாதுகாப்பு அமைச்சர் நாட்டில் இல்லாத சமயம் பதில் பாதுகாப்பு அமைச்சராக ஓர் இரு நாட்கள் மாத்திரமே நான் பணியாற்றியுள்ளேன் என்றும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டத்திற்கு இராஜாங்க அமைச்சராகிய நீங்கள் ஏன் அழைக்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், பாதுகாப்பு பேரவை தொடர்பான கூட்ட முன்னேற்பாடு எனது அமைச்சின் செயலாளருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையிலேயே அது தொடர்பான விடயங்கள் இடம்பெறும். முன்னாள் செயலாளரிடம் இது குறித்து நான் கேட்டுள்ளேன் என்றும் தெரிவித்தார்.

உங்களது அமைச்சிலேயே பாதுகாப்பு அமைச்சு உண்டு. அங்குள்ள உயர் அதிகாரிகள் தேசிய பாகாப்பு பேரவை கூட்டத்திற்கு செல்வது வழமை. அதிகாரிகள் இவ்வாறு செல்வது ஏன் என்பது குறித்து அறியவில்லையா? என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், எனது செயலாளர் மூலமாகவே இவ்வாறு அறிந்து கொள்வேன் என்று தெரிவித்தார்.

வர்த்தமானியின் ஊடாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரக்கென 4 பிரிவுகள் உரித்தாக்கப்பட்டிருந்தது. படைப்பிரிவினர் தொடர்பாகவே இந்த 4 பிரிவுகளும் இடம்பெற்றிருந்தன. அதற்கான பொறுப்புக்களை நான் நிறைவேற்றினேன். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த போதிலும் தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் எனக்கு இருக்கவில்லை. சுமார் நான்கரை வருட காலமாக இந்த அமைச்சில் செயற்பட்டு வருகின்றேன் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com