Tuesday, August 6, 2019

நான்பிடித்த முயலுக்கு மூன்றுகாலென்று சொல்லி மேன்முறையீட்டு மன்றில் குட்டு வாங்கிய விக்கி! நக்கீரன்

முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலையில் மீண்டும் ஒருமுறை மேல்நீதிமன்றம் ஓங்கிக் குட்டியிருக்கிறது. அவருக்கு எதிராக முன்னாள் மாகாண அமைச்சர் ப.டெனீஸ்வரன் தொடுத்த வழக்கில் மேன்முறையீடு நீதிமன்றம் டெனீஸ்வரனுக்குச் சாதகமாகவும் விக்னேஸ்வரனுக்குப் பாதகமாகவும் தீர்ப்பளித்துள்ளது.

டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய முறை சட்டத்துக்குப் புறம்பானது என்றும் அவரை நீக்கி விட்டுப் புதிய அமைச்சர் நியமிக்கப்பட்ட முறையும் சட்டத்துக்கு முரணானது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான மகிந்த அபயவர்த்தன, பிரியந்த பெர்னான்டோ ஆகியோர் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, இந்த வழக்குக்கான செலவினங்களை சி.வி.விக்னேஸ்வரனே செலுத்த வேண்டும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதேவேளை, மேல்நீதிமன்ற உத்தரவைச் செயற்படுத்தத் தவறியதால், நீதிமன்ற உத்தரவை அவமதித்தார் என விக்னேஸ்வரனுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை வரும் செப்ரெம்பர் 10ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

விக்னேஸ்வரனுக்கு எதிரான மேன்முறையீடு நீதிமன்றத் தீர்ப்பு எதிர்பார்த்ததுதான். இந்தச் சிக்கலை அதாவது முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனை பதவியில் இருந்து நீக்கியது சட்டப்படி தவறு என்பது சட்டம் படித்தவர்களுக்கு மட்டுமல்ல சராசரி படித்த மக்களுக்கும் தெரிந்திருந்தது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது டெனீஸ்வரன் அந்த வழக்கைத் திருப்பிப் பெற பெருந்தன்மையுடன் முன்வந்தார். அதாவது தன்னை பதவி நீக்கம் செய்தது சட்டப்படி தவறு என்று விக்னேஸ்வரன் ஒத்துக் கொண்டால் தான் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கைத் திரும்பிப் பெற முன்வந்தார்.

ஆனால் கெடுகுடி சொற்கேளாது என்பது போல விக்னேஸ்வரன் அதனை உதாசீனம் செய்தார். அவரது வழக்கமான தன்முனைப்பு (ego) தலைக்கனம், ஆணவம், செருக்கு, பேராசை அதற்கு இடம் கொடுக்கவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடித்து அவமானத்துக்கு ஆளாகியுள்ளார். தமிழ் மக்களையும் தலைகுனிய வைத்துள்ளார்.

இதில் உள்ள முரண்நகை என்னவென்றால் டெனீஸ்வரன் ஓர் இளம் சட்டத்தரணி. ஆனால் விக்னேஸ்வரனோ உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்து ஓய்வு பெற்றவர். இருபத்தைந்து ஆண்டு நீதித்துறையில் பணியாற்றியவர். ஒர் இளம் சட்டத்தரணிக்குத் தெரிந்த சட்டம் நீதித்துறையில் கால்நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக நீதிபதி/ நீதியரசராக இருந்த விக்னேஸ்வரனுக்குத் தெரியவில்லை.

கதை இதோடு முடியவில்லை. மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்தகதையாக வழக்குச் செலவினங்களையும் விக்னேஸ்வரன், டெனீஸ்வரனுக்கு கட்ட வேண்டும் என்று மேன்முறையீடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்னொரு கத்தியும் விக்னேஸ்வரன் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. மேலே கூறியவாறு நீதிமன்ற உத்தரவை விக்னேஸ்வரன் அவமதித்தார் என அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் செப்ரெம்பர் 10ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.

ஒரு சிலர் நாம் விக்னேஸ்வரனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கடுமையாக விமர்ச்சிப்பதாக நினைக்கக் கூடும். அவரைப் புத்திமான், யோக்கியவான், அரசியலில் சூரன் எனப் போற்றிபாடும் பக்தர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக அவரது வெளிநாட்டுப் பக்தகோடிகள்!

எனவே “இனி இது இரகசியம் இல்லை” என்ற தலைப்பில் நாள்தோறும் எழுதிவரும் காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் இந்தத் தீர்ப்பையிட்டு எழுதியுள்ளதை அப்படியே கீழே தருகிறோம். படித்துவிட்டு விக்னேஸ்வரன் ஒரு குழப்பவாதியா இல்லையா எனத் தீர்ப்புக் கூறுங்கள்! வித்தியாதரன் ததேகூ அரசியலையும் அவ்வப்போது கடுமையாக விமர்சிப்பவர். தன்னை நடுநிலையாளர் எனச் சொல்லிக் கொள்பவர்.

காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது’ என்றேன். – முன் னாள் வடக்கு முதல்வர் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தொடர்ந்த வழக்குத் தொடர்பாக.நீதிமன்றத் தீர்ப்பு அதைத்தான் எடுத்துரைப்பதாக எனக்குத் தோன்றுகின்றது.

இந்த வழக்குச் சம்பந்தமான பிரச்சினையில் வடக்கு மாகாண சபையையும், அதன் பின்னர் நீதிமன்றத்தையும் போட்டுக் குழப்போ குழப்பு என்று குழப்பிய நீதியரசர் விக்னேஸ்வரன், இப்போது நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் மக்களையும் குழப்பத் தயாராகி விட்டார் போலத் தோன்றுகின்றது.

தீர்ப்புக்குப் பின்னர் அவர் வெளியிட்ட குழப்ப அறிவிப்பு’ அப்படிப்பட்ட எண்ணத்தைத் தான் தருகின்றது. விடயம் வெகு ஸிம்பிளானது. மாகாண சபைக்கு முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்கள். ஆளுங்கட்சி முதல்வரைத் தேர்வு செய்து எழுத்து மூலம் ஆளுநருக்கு அறிவிக்கும். தான் உட்பட மாகாண சபையிலிருந்து ஐவரை உரிய அமைச்சுகளின் ஒதுக்கீடுகளுடன் அமைச்சர்கள் பதவிக்குப் பரிந்துரை செய்வார் முதல்வர். முதல்வரின் அந்தப் பரிந்துரைக்கு அமைய அமைச்சர்களை நியமித்து சத்தியப்பிரமாணம் செய்து வைப்பார் ஆளுநர்.

நியமனம் எப்படியோ அப்படித்தான் பதவி விலக்கலும். ஓர் அமைச்சரைப் பதவி விலக்குவதாயின் அதற்கான பரிந்துரையை முதலமைச்சர் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். ஆளுநர் அந்தப் பரிந்துரைப்படி அந்த அமைச்சரைப் பதவி விலக்குவார். புதிய பரிந்துரை முதல்வரிடம் இருந்து கிடைத்தால் அதன்படி புதியவரை அமைச்சராக நியமித்து சத்தியப் பிரமாணம் செய்து வைப்பார் ஆளுநர்.
– இவ்வளவும்தான் விடயம்.

இதை டெனீஸ்வரன் விடயத்தில் முதல்வர் விக்னேஸ்வரன் செய்யவில்லை. செய்யத் தவறிவிட்டார். செய்யத் தவறியமை மட்டுமன்றி. அதைமூடி மறைக்க இப்போதும் குழப்பம் ஏற்படுத்தும் கதைகளை
அவர் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றமை அழகல்ல.

தமது கோரிக்கையை ஏற்று டெனீஸ்வரன் பதவி விலகாவிட்டால் அவரை முதல்வர் பதவி விலக்கலாம். அதற்கு வழி என்ன?

நான் முன்னர் சுட்டிக்காட்டியபடி, ‘டெனீஸ்வரனை நான் பதவி விலக்கப் பரிந்துரைக்கிறேன்’ என்ற பரிந்துரையை அவர் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். ஆளுநர் அதன்படி நடப்பார். நடக்க வேண்டும். அது அவரது கடப்பாடு.

ஆனால், முதல்வர் விக்னேஸ்வரன் அப்படிச் செய்யவில்லை. அவர் தம்பாட்டில் ஒரு கடிதத்தை டெனீஸ்வரனுக்குஎழுதினார்.

நான் உம்மைப் பதவி விலக்கி விட்டேன், பொறுப்புக்களை உமது அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்து விட்டு நீர் பதவியைக் காலி செய்யலாம் என்ற சாரப்பட அந்தக் கடிதம் அமைந்தது.

அந்தக் கடிதத்தையே தவறானது என்று தெரிவித்து நீதிமன்றத்தில் அதனைச் சவாலுக்கு உட்படுத்தினார் டெனீஸ்வரன். பிரச்சினை வந்ததும், டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து தாம் விலக்குகின்றார் என்று குறிப்பிட்டு அவருக்கு (டெனீஸுக்கு) தாம் எழுதிய கடிதத்தை – அதன் பிரதியை – ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்

முதல்வர் விக்னேஸ்வரன். அந்தக் கடிதத்தை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, அதன்படி டெனீஸ்வரனின் பதவி நீக்கத்தை வர்த்தமானியில் அறிவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கதை எல்லாம் இப்போது விடுகின்றார் விக்னேஸ்வரன்.

டெனீஸ்வரனைப் பதவி நீக்குவதாயின் அதற்கான பரிந்துரை நேரடியாக ஆளுநருக்கு முகவரியிட்டு, அனுப்பப்பட வேண்டும். அதை விடுத்து டெனீஸ்வரனுக்கு முகவரியிட்டு, உம்மைப் பதவி
விலக்குகிறேன் என்று ஒரு கடிதத்தை அனுப்பி விட்டு, அதை ஆளுநருக்குச் சமர்ப்பித்தால் அதன் அடிப்படையில் எப்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க முடியும்?

இந்த விவரங்களை மூடுமந்திரமாக வைத்துக் கொண்டு நீதியரசர் விக்னேஸ்வரன் நேற்று மாலை ஒரு சிறிய அறிக்கையை விடுத்திருக்கின்றார். (தீர்ப்பை வழங்கிய) நீதியரசர்கள் முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுக்கவில்லை போல் தெரிகின்றது. அதாவது, டெனீஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்குவதாகக் கூறி அனுப்பிய எழுத்திலான கடிதம் ஆளுநரிடம் சேர்ப்பிக்கப்பட்டது. முன்னைய அமைச்சரை நீக்குவதாக அவருக்கு அறிவிக்கப்பட்டும் ஏன் அதனை ஆளுநர் வர்த்தமானியில் பிரசுரிக்கவில்லை….!” என்றெல்லாம் அந்த அறிக்கையில் நீதியரசர் விக்னேஸ்வரன் குறிப்பிடுகின்றார். ஆனால் யாருக்கு முகவரியிட்டு அனுப்பிய கடிதம் ஆளுநரிடம் சேர்ப்பிக்கப்பட்டது என்ற விடயத்தைத் தந்திரமாக மறைத்து விட்டார் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்.

ஆளுநருக்கு முகவரியிட்டு, டெனீஸ்வரனைப் பதவி நீக்கத்தாம் பரிந்துரைக்கிறார் என்று அவர் கடிதம் எழுதியிருப்பாராயின், இந்தச் சிக்கல் ஏதும் வந்தே இருக்காது.

டெனீஸ்வரனைப் பதவி விலக்கு கின்றார் என்று டெனிஸுக்குத்தாமே கடிதம் எழுதி விட்டு, அந்தக் கடிதத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, டெனிஸ் நீக்கப்பட்டமை குறித்து வர்த்தமானியில் பிரசுரிக்கவில்லை என்று ஆளுநர் மீது அவர் குறை சொல்வது முற்றிலும் தவறானது.

அடுத்தது – அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக முதலமைச்சரின் பதவிக்கும், 13ஆவது திருத்தத்துக்கும் முடிச்சுப் போட்டு அவர் விடும் கதை.மாகாண சபையில் ஐந்து அமைச்சர்களை நியமிப்பதும், அவர்களுக்கான அமைச்சுக்களை ஒதுக்குவதும் முதலமைச்சருக்கே உரிய தனித்துவமான பாத்தியம் – உரிமை. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால் அதைச் செய்வதற்கான வழிமுறை ஆளுநர் ஊடானது. என்றாலும், முதல்வரின் பரிந்துரையை மீறி இதில் ஆளுநர் நடக்க முடியாது.

பதின்மூன்றாவது திருத்தத்தில் பல பின்னடைவுகள், குறைபாடுகள் மிகத் தாராளமாக உண்டு. ஆனால், அமைச்சர் நியமனம், பதவி விலக்கல் விடயங்களில் பின்பற்ற வேண்டிய சாதாரண நடைமுறைப் போக்கில் தவறிழைத்துவிட்டு – அந்தத் தவறைத் திருத்த மறுத்துத் தொடர்ந்து வீண் பிடிவாதம் பிடித்து எல்லாவற்றையும் குழப்பி விட்டு – அதன் காரணமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் குட்டையும் வாங்கிக் கொண்டு விட்டு -அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி விலக்கும் அதிகாரமே முதலமைச்சருக்கு இல்லாத – ஆளுநருக்கு மட்டுமே இருக்கின்ற – ஒரு முறைமையைக் கொண்டிருக்கும் 13ஆவது திருத்தச் சட்டம் எவ்வளவு வலுவற்றது என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என விக்னேஸ்வரன் வாதிடுவது அபத்தமானது. தமது தவறை அவரே மூடிமறைக்கும் தந்திரோபாய வாதம் இது.

13ஆவது திருத்தம் வலுவற்றது என்பது முழு உண்மை. அதற்குப் பல உதாரணங்கள், காரணங்கள், வாதங்கள், நியாயங்கள் உண்டு. ஆனால், அதற்கு இந்தத் தீர்ப்பு உதாரணம் அல்ல. 13ஆவது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைச் சரியாகப் பிரயோகிக்கத் தெரியாத ஒருவரின் செயற்பாட்டை நிரூபிக்கும் தீர்ப்புத்தான் இதுவேயன்றி, 13ஆவது திருத்தத்தின் குறைபாட்டை குறியீடு செய்யும் தீர்ப்பல்ல இது.

இந்த விடயத்தில் வீண் பிடிவாதம், அபவாதம் போன்றவற்றை முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் விடுத்து, உண்மைகளைப் பகிரங்க வெளியில் ஒப்புக் கொண்டு நேர்ந்த தவறுகளை திருத்த வழி தேடுவதே நல்லது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com