Thursday, August 29, 2019

'நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரணிலால் ஒழிக்க முடியாது' என்கின்றனர் மைத்திரியும் மகிந்தவும்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த பிரேரணையை நிராகரிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ இருவரும் முடிவு செய்துள்ளனர். ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் நேற்று முன் தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இரவு சந்தித்து ஒரு மணி நேரம் அளவில் இதுபற்றிக் கலந்தாலோசி்த்துள்ளனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது தொடர்பான பிரேரணையை ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளித்துள்ளார். அதுதொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்தாலோசனை செய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் உடன்பட்டுள்ளதுடன், அதற்கேற்பவே இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு இந்தக் காலப்பிரிவு பொருத்தமற்றது எனவும், அதன்மூலம் நாட்டை அபாயத்தின்பால் கொண்டு செல்வதற்குத் தான் தயாராக இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் அங்கு குறிப்பிட்டுள்ளார். அங்கு அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு 19 ஆவது அரசியல் யாப்பு கொண்டு வந்ததற்கேற்ப நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக 20 ஆவது அரசியல் யாப்பினைக் கொண்டுவர முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். அங்கு இருவரும் சந்தித்த வேளையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க மாட்டோம் என இருவரும் முடிவு செய்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைவது தொடர்பில் அங்கு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இரண்டு கட்சிகளினதும் பிரேரணைகளையும் அலசி ஆராய்ந்து இறுதி முடிவினை எடுக்க இரு தலைவர்களும் இணங்கியுள்ளனர்.

வெகுவிரைவில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் அழைப்பதற்கு தலைவர்களும் இருவரும் ஏகமனதாக முடிவு செய்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

அதேசந்தர்ப்பத்தில் அமைச்சரவை உறுப்பினர்களை 30 ஆக மட்டுப்படுத்தவும் தேர்தல் முறைமையையும் மாற்றியமைக்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உடன்பட்டதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பிலான பிரேரணைக்கு பொதுஜன பெரமுன உடன்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி இருவரிடையேயும் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் பின்னர் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினததும் பொதுஜன பெரமுனவினதும் பிரதிநிதிகளிடையே பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிட்ட மகிந்த அமரவீர, இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாகவுள்ளவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளரே எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment