Saturday, August 10, 2019

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு உதவியோருடன் கூட்டுச்சேர மாட்டோம். த.தே.கூ வும் வேண்டாம்! பசில் திட்டவட்டம்.

இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு உதவி புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள எவரையும் தமது கூட்டணியில் இணைத்துக்கொள்ள மாட்டோம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப்பீடத்தை எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அதனைதொடர்ந்து தமது கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த அறிவிக்கவுள்ளதாகவும் தெரியப்படுத்தும் ஊடகவியலளார் மாநாட்டிலேயே அவர் மேற்கண்ட உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் தாம் கூட்டு வைக்க எதிர்பார்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்வில் அவர் கூறுகையில் :

'கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான மக்கள் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவில்லை. வடக்கு கிழக்கில் அவர்களைத் தவிர்ந்த பல கட்சிகள் எங்களுடன் உள்ளன. அவர்களுடன் இணைந்து பேசி ஆட்சி அமைப்போம்.'


கொழும்பு – கிங்ஸ்பரி ஹோட்டலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

'ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றியீட்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்கு முடிவுகட்டுவதில் நாட்டு மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள்' எனவும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment