சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கெதிரான சர்வதேசத்தின் கூக்குரல். மூஞ்சையில் குத்தியது வெளிவிவகார அமைச்சு.
இராணுவத் தளபதியாக லெப்டினட் ஜெனரல் சாவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு வெளிசக்திகள் கூக்குரல் எழுப்பி வருகின்றது. இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களின் நேரடியாக தலையிடும் குறித்த அத்துமீறல்களுக்கு இலங்கை அரசாங்கம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு நேற்று விடுத்துள்ள அறிக்கையில், சிறிலங்கா இராணுவத் தளபதியின் நியமனம் தொடர்பான விடயத்தில், வெளிநாட்டுத் தரப்பினர் தேவையற்ற தலையீடுகளைச் செய்வதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
'சிறிலங்கா இராணுவத் தளபதியின் நியமனம், சிறிலங்கா அதிபரின் இறையாண்மைக்கு உட்பட்ட தீர்மானமாகும்.
நாட்டின் பொதுச்சேவை, பதவியுயர்வு தொடர்பான தீர்மானங்கள் மற்றும் உள்நாட்டு நிர்வாக செயன்முறைகளைப் பாதிக்கும் வகையில், வெளிநாட்டு தரப்பினரின் முயற்சிகள், தேவையற்றவையும், ஏற்றுக்கொள்ள முடியாதவையும் ஆகும்.
லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு, அவரது நியமனம் தொடர்பாக அதிருப்தி தெரிவித்துக் கருத்துக்களை வெளியிடுவது கவலையளிக்கிறது.
இது அனைத்துலக சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த எல்லாத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும், இயற்கை நீதி கொள்கைகளுக்கு முரணானதாகும்' என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முதலைக்கண்ணீர் :
மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதானது, வெளிநாட்டு முதலீடுகளையும், இராணுவ ஒத்துழைப்பையும் பாதிக்கும் என்று, அமெரிக்கா எச்சரித்துள்ளது.
வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி ஒருவரே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம், 2009 இல் முடிவுற்ற மிருகத்தனமான மோதலின் பின்னரான, நிலையான நல்லிணக்கத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இது மிகஉயர்மட்ட அரசியல் சூழலாகும், சில அரசியல் சக்திகள் தேசியவாதத்தை வைத்து விளையாடுவதன் மூலம், அதிக பயன் அடையலாம் என்று கருதுகின்றன.
தெளிவான, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் பதிவுகளில் உள்ள ஒரு ஜெனரலின் பதவி உயர்வின் மூலம் இந்த, தேசியவாதம் செயற்படுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இதுகுறித்து நாங்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளோம்.
இராணுவத் தளபதி, மனித உரிமை மீறல்களைப் புரிந்தவர் என அறியப்பட்டவர் என்றால், சிறிலங்காவுடன் வலுவான இராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்தும் போது, நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்புகள் இருக்கும்.
இது, வெளிநாட்டு முதலீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.
அதிக துருவநிலைப்படுத்தலுக்கு வழிவகுக்கும் ஒரு சூழ்நிலையைக் கண்டால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதற்கு வரம்புகள் உள்ளன.
அத்துடன் சிறிலங்காவின் நகர்ப்புற போக்குவரத்து அமைப்பு மற்றும் உட்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கு, அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியம் மூலம் புதிய 480 மில்லியன் டொலர் நன்கொடை வழங்குவதையும், இந்த நியமனம் பாதிக்கக் கூடும்.
இந்த உதவியை ஒரு நாடு பெறுவதற்கு, ஜனநாயகத்துக்கான அதன் உறுதிப்பாடு குறித்த மதிப்பீடும் ஒரு காரணியாக கொள்ளப்படும்' என்றும் அவர் கூறினார்.
கனடாவின் கவலை :
லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது, சிறிலங்காவின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று கனடா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கொழும்பில் உள்ள கனேடிய தூதரகம் வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவில்,
'போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக, அவருக்கு எதிராக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக, லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
அவரது நியமனம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, ' என்று கூறப்பட்டுள்ளது.
யஸ்மின் சூகா வின் அறிக்கை.
சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதைக் கண்டித்துள்ள, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், இந்த நியமனத்தின் மூலம் சிறிலங்கா அரசாங்கம் தனது மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
'ஒரு மோசமான போர்க்குற்றவாளியாக குற்றம்சாட்டப்படும், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை, இராணுவத் தளபதியாக நியமித்து, சிறிலங்கா அதிபர் நாட்டுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவருக்கு எதிராக போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவரது இந்த நியமனம் நல்லிணக்க செயல்முறைகளையும் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதை அடையாளப்படுத்துகிறது.
லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா வெளிநாடுகளுக்குப் பயணிப்பதற்கு- அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொள்வதற்குக் கூட, நுழைவிசைவுகளை மறுக்குமாறு சிறிலங்காவின் கூட்டாளி நாடுகளிடம் கோருவதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பதவி உயர்வு நாடு முழுவதும் அச்சத்தைத் தூண்டும், குறிப்பாக, 2009 ஆம் ஆண்டில் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் மேற்பார்வையில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களில் பெரும் இழப்பை சந்தித்த நூறாயிரக்கணக்கான தமிழர்களிடையே, அச்சத்தை ஏற்படுத்தும் என, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.
எண்பதுகளின் பிற்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சியை நசுக்குவதில் தனது பங்கிற்காக சவேந்திர சில்வா ஒருபோதும் பொறுப்புக்கூறவில்லை.
இதன்போது, படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள், சித்திரவதை, பாலியல் வன்முறைகள், ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளன.
அப்போது, கோத்தாபய ராஜபக்சவின் தலைமையின் கீழ், 1 ஆவது கஜபா ரெஜிமென்ட்டில், சவேந்திர சில்வா பணியாற்றியிருந்தார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா வும் கவலை அடைகின்றதாம்.
சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடைவதாக, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசின் சார்பில், அவரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நேற்று நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.
'சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
எமது தரப்பில், இந்த நியமனம் குறித்து நாங்களும் கவலையடைகிறோம்.
ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகளில்,நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களும், மிகஉயர்ந்த மனித உரிமை தரங்களுக்கு அமைய இருக்க வேண்டும் என்ற விடயத்தில், ஐ.நா உறுதியுடன் உள்ளது.
ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் அனைத்து சிறிலங்கா சீருடை பணியாளர்களும் விரிவான மனித உரிமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.' என்றும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment