Wednesday, August 14, 2019

பயிற்சிபெற்ற பயங்கரவாதிகளில் 50% வெளியே....ஜனாதிபதியாகக் களமிறங்கவும் தயார்.... -பொன்சேக்கா

நாட்டின் தேவைப்பாடு கருதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நில்லுங்கள் என என்னிடம் சொன்னால், ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதற்குத் தான் தயாராகவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

ஜனாதிபதியாகத் தான் தெரிவானால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் எனவும், மாளிகைகள் உருவாக்குவதற்கும் மனைவிமாரை உயர்த்துவதற்கும் தனக்குத் தேவையில்லை எனவும், பொறுப்புடன் கருமமாற்றுவதற்குத் தன்னால் இயலும் எனவும் பொன்சேக்கா தெரிவித்தார். நேற்று (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது :

"ராஜபக்ஷ போன்ற ஒருவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் கைொடுக்கும் அளவுக்கு நான் கீழ்மட்டத்திற்குச் செல்லவில்லை. ராஜபக்ஷ கூட்டத்தார் பற்றி என் மனதில் உள்ள எண்ணப்பாட்டில் எந்தவித மாற்றமுமில்லை. அந்த எண்ணப்பாடு என்றும் இருக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் சரியான - மிகச் சரியான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும். அவருக்காக நான் கடின உழைப்புடன் செயற்படுவேன். பொருத்தமற்ற ஒருவரை நிறுத்தினால் மனச்சாட்சிக்கு எதிராக என்னால் செயற்பட முடியாது.

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று நாட்டின் தலைவர் கூறுகின்றார். இன்றும் மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு ஏற்ப, பயிற்சி பெற்றுள்ள தற்கொலைக் குண்டுதாரிகள், பல்வேறு பயிற்சிகளைப் பெற்றுள்ள பயங்கரவாதிகளில் நுாற்றுக்கு ஐம்பது வீதமானோர் மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஐம்பது வீதமானோர் வெளியே இருக்கிறார்கள். என்றாலும், நாங்கள் பயங்கரவாதிகளைக் கைது செய்துவிட்டோம். அவர்களின் பெரும்பகுதியினரை அழித்துவிட்டோம்... இனிப் பயங்கவாதத்திற்குப் பயப்படத் தேவையில்லை என்று நாட்டின் தலைவர் கூறுகின்றார்.

நாங்கள் விகடர்களாக மக்கள் மத்தியில் சென்றது பாேதும். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அனுபவம் வாய்ந்த ஒழுக்கநெறியின்றும் தவறாத ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி இதுதொடர்பாக சிந்தித்தால் என்னைப் பற்றியும் சிந்திக்கும்.

நாட்டின் பாதுகாப்புப் பற்றி நன்கு அறிந்தவர் கோத்தபாய ராஜபக்ஷ மட்டுந்தான் என்று நான் சொல்ல மாட்டேன். என்றாலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோத்தபாய ராஜபக்ஷவின் பெயரைச் சொல்லக் காரணம் நாட்டின் எதிர்காலம் பற்றிச் சிந்தித்ததனாலேயே.. இதுவும் நல்ல முடிவுதான்." எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment