ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்தப்பக்கம்? வை எல் எஸ் ஹமீட் - பாகம் 1
பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் யார்? என்ற எதிர்பார்ப்பும் ஊகங்களும் நிலவும் இவ்வேளையில் “ யார் வேட்பாளர்” என்பதைத் தீர்மானிக்கும் சக்தி சிறுபான்மை என்ற முறையில் நம்மிடமில்லாதபோதும் யார் ஜனாதிபதியாக வரவேண்டும்; என்பதைத் தீர்மானிப்பதில் ஒரு பெரும் பங்குதாரராக இருக்கின்றோம்.
இந்த பெரும் பொறுப்பை ஒரு சமூகமென்ற ரீதியில் எவ்வாறு நிறைவேற்றப்போகின்றோம்? எக்காரணிகளை அடிப்படையாக வைத்து அத்தீர்மானத்தை எடுக்கப்போகின்றோம்?
அல்லது ஒவ்வொருவரும் மனம்போனபோக்கில் எந்தவித சமூகம் சார்ந்த காரணிகளும் இல்லாமல் தீர்மானம் எடுக்கப்போகின்றோமா? இவைகள் இன்று நமக்கு முன்னால் இருக்கின்ற கேள்விகளாகும்.
இன்று நமது நிலை
இன்று நமது நிலை எவ்வாறு இருக்கின்றதென்றால், ஒரு கூட்டம் ஏற்கனவே நாம் மஹிந்த தரப்பு; மஹிந்த யாரை நிறுத்தினாலும் அவருக்கு வாக்களிப்போம்; என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அந்த வேட்பாளர் இனவாதியா? அடுத்த வேட்பாளர்களுடன் ஒப்பிடும்போது அவர் இனவாதத்தில் அவர்களைவிட குறைந்தவராக இருப்பாரா? கூடியவராக இருப்பாரா? என்பதைப்பற்றி எந்தக்கவலையுமில்லை. அடுத்த வேட்பாளர் யாரென்றும் தெரியாது. ஆனால் மஹிந்த யாரை நிறுத்தினாலும் அவருக்கு ஆதரவளிப்போம்; இது அவர்களது நிலைப்பாடு. இது அறிவுபூர்வமானதா? இவ்வாறான நிலைப்பாட்டை சமூகத்திற்கான நிலைப்பாடு எனக்கூறலாமா?
மட்டுமல்ல, ரணிலின் அரசாங்கத்தின்கீழ் முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு பாதிப்பு ஏற்படும்போதும் ரணிலை விமர்சிப்பதோடு, மஹிந்தவைத் தோற்கடித்ததுதான் முஸ்லிம்கள் அந்தப்பாதிப்பை சந்திப்பதற்கான காரணம். மஹிந்த வெற்றிபெற்றிருந்தால் அவ்வாறான பாதிப்புக்கள் எதுவும் முஸ்லிம்களுக்கு நிகழ்ந்திருக்காது; என்பதுபோல் அவர்கள் கருத்துக்களைப் பதிவிடுகிறார்கள்.
அவர்களது நோக்கம், முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பாவித்து ரணிலிருக்கெதிரான அதேநேரம் மஹிந்தவுக்கு ஆதரவான ஒரு மனோநிலையை முஸ்லிம்களிடம் ஏற்படுத்துவது. இது ஒரு நேர்மையான நிலைப்பாடா?
முஸ்லிம்களைப் பாதுகாக்க ரணில் அரசாங்கம் தவறுகின்றபோது ரணிலை விமர்சிப்பதில் தவறில்லை. ரணில் பிழை செய்கின்றார்; என்பதற்காக மஹிந்த எவ்வாறு சரியாவார்; என்பதற்கு அவர்களிடம் விடையில்லை. ஒரு கூட்டம் இவ்வாறு அலைகின்றபோது, அடுத்த பக்கம் என்ன நடைபெறுகிறது.
மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்கள் அனுபவித்த கொடுமை காரணமாகத்தான் ரணில்- மைத்திரி ஆட்சியைக் கொண்டுவந்தோம். நாம் சாதித்ததென்ன? ஏன் சாதிக்க முடியவில்லை. ஆகக்குறைந்தது நமது பாதுகாப்பாவது உறுதிப்படுத்தப்பட்டதா? இனவாதம் கட்டுப்படுத்தப்பட்டதா?
இந்நிலையில் ரணிலை முஸ்லிம் தலைவர்கள் முதற்கொண்டு அனைவரும் விமர்சிக்கிறார்கள். ஆனால் ஐ தே க அமைக்கப்போகும் கூட்டணியில் நம்மவரும் இருப்பதாக, இவர்கள் சொல்லாவிட்டாலும் அவர்கள் சொல்கிறார்கள். இக்கூட்டணி தொடர்பான கட்சித்தலைவர் கூட்டங்களிலும் நம்மவர்கள் கலந்துகொள்கிறார்கள். என்ன அடிப்படையில் அங்கம் வகிக்கப்போகிறார்கள்? எவற்றைக் கேட்டு ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்கள்? ஒப்பந்தம் செய்யவேண்டியவற்றை அடையாளம் கண்டிருக்கிறார்களா? முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமை பட்டதாக கூறினார்கள்; கூட்டாக சமூகத்திற்காக ஒப்பந்தம் செய்வார்களா? தெரியாது.
மஹிந்த தற்போது எதிர்க்கட்சி. அவருடன் இணைவதாக இருந்தால் ஒரு ஒப்பந்தம் செய்தாக வேண்டும். இவர்களுடன் சேர்வதாக இருந்தாலும் ஓர் ஒப்பந்தம் செய்யவேண்டும்; என்பது அவசியம் என்றபோதிலும் இன்று இவர்கள்தான் ஆட்சியில் இருக்கின்றார்கள். ஏன் அவ்வொப்பந்தத்தில் உள்ளடக்கவேண்டிய பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை.
அவ்வாறு ஆட்சியின்போது தீர்க்காதவர்கள் அடுத்தமுறை ஆட்சிக்கு வந்து தீர்ப்பார்கள்; என்பதற்கு என்ன உத்தரவாதம்? அவ்வாறு உண்மையில் தீர்க்கத்தயார் என்றால் அவர்களது ஆட்சிக்கு இன்னும் சில மாதங்கள் ஆயுள் இருக்கின்றது. ஏன் தீர்க்கமுடியாது? ஆகக்குறைந்தது ஒரு சிலவற்றையாவது தீர்த்துவிட்டு எஞ்சியவற்றை ஒப்பந்தத்தில் உள்வாங்கி அடுத்தமுறை தீர்ப்போம் என்று உத்தரவாதம் அளிக்கலாம். ஆனாலும் அவை ஏன் இப்பொழுது தீர்க்கப்படவில்லை என்பதற்கு வலுவான காரணம் கூறப்படவேண்டும்.
இவை எதுவும் செய்யாமல் ஒரு கண்துடைப்பு ஒப்பந்தத்துடன் வருவார்களா? அவ்வாறு வந்தால் தமது கட்சி சொல்கிறது; என்பதற்காக மக்களும் அதனை ஆதரிப்பார்களா? அவ்வாறாயின் மக்கள் சொந்த மூளையால் சிந்திக்க மாட்டார்கள் என்பது பொருளா? இவ்வாறான பல கேள்விகளை நோக்கி நமது கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதில் சிந்திக்கவேண்டிய முக்கிய அம்சங்கள்
சிலர் அடுத்து வரப்போகும் ஜனாதிபதி எதுவித அதிகாரமுமற்றவர்; பிரதமர்தான் அதிகாரமுடையவர்; என்கிறார்கள். அது உண்மையா? அது உண்மையெனில் ஜனாதிபதித் தேர்தல் எதுவித முக்கியத்துவமுமற்றதா? அல்லது இன்னும் கணிசமான அதிகாரத்தைக்கொண்டதா?
அவ்வாறாயின் அவ்வதிகாரங்கள் என்ன?
அவ்வதிகாரங்கள் ஆட்சியில் செலுத்தக்கூடிய சாத்தியமான தாக்கங்கள் எவை? அவை சிறுபான்மை மீது எதிரொலிக்கப்போகும் சாத்தியமான தாக்கங்கள் எவை?
ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பாராளுமன்றப்பலம் இன்னுமொரு கட்சியிலும் இருந்தால் அவற்றால் ஏற்படப்போகும் விளைவுகள் எவை? அவை தற்போதும் அவ்வாறான சூழ்நிலை நிலவியதால் ஏற்பட்ட தாக்களுக்கு ஒப்பானவையாக இருக்குமா? அல்லது மாறுபட்டவையாக இருக்குமா?
ஜனாதிபதியும் பாராளுமன்றமும் ஒரே பக்கம் இருந்தால் ஆட்சியொழுங்கு எவ்வாறு இருக்கும்? சிறுபான்மை நிலை எவ்வாறு இருக்கும்?
இந்த சூழல் ஐ தே க ஜனாதிபதியும் அதே கட்சி அரசாங்கமும் இருக்கின்றபோதும் மாறாக, பொதுபெரமுன ஜனாதிபதியும் அதே கட்சி ஆட்சியும் இருக்கும்போது ஒரே விதமாக இருப்பதற்கான சாத்தியம் இருக்கின்றதா? அல்லது மாறுபட்ட விதமாக இருப்பதற்கான சாத்தியம் இருக்கின்றதா?
இந்த சாத்தியப்பாடுகள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுகின்றவரைப் பொறுத்து மாறுபடுமா? அவ்வாறாயின் சாத்தியமான மாறுபாடுகள் எவ்வகையானதாக இருக்கலாம்? சிறுபான்மையின் பார்வையில் அவற்றை எவ்வாறு பார்க்கலாம்?
இவ்வாறு பல கேள்விகளுக்கு நாம் தெளிவாக காணுகின்ற விடைகள் நாம் ஆதரிக்கப்போகும் ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பதைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர நமது வெற்று உணர்வுகளோ, விசுவாங்களோ தீர்மானிக்கக்கூடாது. அவ்வாறு தீர்மானிக்குமாயின் நாமாகவே நமது தலையில் நெருப்பை அள்ளிக்கொட்டியது போலாகும்.
எனவே, இவை ஒவ்வொன்றையும் அடுத்தடுத்த பாகங்களில் விரிவாக ஆராய்வோம். இன்ஷாஅல்லாஹ்.
( தொடரும்)
0 comments :
Post a Comment