சஹ்ரானின் மனைவி வீசி, எறிந்த தொலைபேசி கண்டெடுப்பு!
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய அடிப்படைவாத குழுவின் தலைவரான சஹ்ரானின் மனைவியினால் வீசியெறிந்ததாகக் கூறப்படும் கையடக்கத் தொலைபேசியின் சில பகுதிகள் பொலிஸ் விஷேட அதிரடிப்படைப் பிரிவினரால் திவுலப்பிட்டிய – மீரிகமை வீதியின் ஹல்பே குருல்லகம, உலுகடை சந்திக்கு அருகில் வயல் வெளியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சஹ்ரானின் மனைவி, இந்த பாதையினூடாக பயணித்த போது கையடக்கத் தொலைபேசியை உடைத்து இந்த வெளியில் வீசியெறிந்ததாக இரகசிய பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தினையடுத்து பொலிஸாரும், பொலிஸ் விஷேட அதிரடிப்படை பிரிவினரும் அப்பகுதியில் புற்களை வெட்டி தேடுதல்களை மேற்கொண்ட போதே குறிப்பிட்ட கையடக்கத் தொலைபேசியின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இரகசியப் பொலிஸாரின் தடுப்புக்காவலின் கீழ் இருந்துவரும் சஹ்ரானின் மனைவி இந்தப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அவர் இனங்காட்டிய குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அச்சந்தர்ப்பத்திலே கையடக்கத் தொலைபேசியின் பகுதிகள் என சந்தேகிக்கப்படும் சிலவற்றை கடந்த 30 ஆம் திகதி மாலை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நடவடிக்கைகளுக்கு மீரிகம பொலிஸாரும், பிரதேசத்தின் பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்கினர்.
முகத்தை மறைத்து ஆடை அணிந்த முஸ்லிம் பெண்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி மீரிகம, ஹந்தாமுல்ல பகுதியிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் சிங்களப் பெண்கள் அணியும் 10 வெள்ளை நிற ஆடை கொள்வனவு செய்திருந்தனர்.
இதேவேளை கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது சுனாமி குடியேற்ற கிராமத்தில் தற்கொலை குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்கச் செய்து பலியான வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆடை கொள்வனவு செய்யப்பட்ட கடையின் விபரங்கள் தொடர்பாக நடாத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த விபரங்கள் வெளிவந்தன.
அவ்விடத்தில் சஹ்ரானின் மனைவி காயங்களுக்குள்ளாகியிருந்த நிலையில் இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது சி.ஐ.டி.யின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment