Friday, July 5, 2019

புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக வைகோ வை ஓராண்டு கம்பி எண்ண இந்திய நீதிமன்று உத்தரவு.

இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்புக்கு ஆதரவாக பேசிய தேசத்துரோகக் குற்றத்திற்காக வை. கோபாலசாமிக்கு இந்தியத் நீதிமன்றினால் ஒராண்டுச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இன்று வழங்கப்பட்டுள்ள இத்தண்டனை தொடர்பாக இந்திய ஊடகச் செய்திகள் கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றது.

திமுகவுடன் செய்துகொண்ட ஒப்பந்த அடிப்படையில் மதிமுகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டது. அதனடிப்படையில் வைகோ வேட்பாளராக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீதுள்ள வழக்கு ராஜ்யசபா உறுப்பினர் ஆவதற்கு இடையூறாக இருந்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு எழும்பூர் ராணி சீதை அரங்கில் “நான் குற்றம் சாட்டுகிறேன்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய வைகோ, இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் - திமுகவிற்கு எதிராகவும் பேசினார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவர் பேசியதாக கூறப்பட்டது.

இதைக் காரணம் காட்டி, இந்திய இறையாண்மைக்கு எதிராக வைகோ பேசியிருப்பதாகக் கூறி, திமுக ஆட்சியில் தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. நீண்டகாலம் நடந்து வந்த இந்த வழக்கு தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதன் தீர்ப்பு இன்று வெளியானது. நீதிபதி சாந்தி வைகோ குற்றவாளி என தீர்ப்பளித்தார். தீர்ப்பை இன்றே சொல்லவா அல்லது திங்கட்கிழமை சொல்லவா என நீதிபதி வைகோவிடம் கேட்டார். இன்றே அளிக்கும்படி வைகோ தெரிவித்தார். அதன்படி வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

பொதுவாக 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் மட்டுமே ஒருவர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் ஆவார். அதன்படி ஓராண்டு சிறை தண்டனை என்பது வைகோவின் மாநிலங்களவைத் தேர்வு பாதிக்கப்படுமா? என்பது வேட்பு மனுவைப் பரிசீலிக்கும் தேர்தல் அதிகாரியின் முடிவைப் பொறுத்தே அமையும் என்று ஒருசாரரும், 8(3)-ன் கீழ் இரண்டு ஆண்டுக்குள் தண்டனை பெற்றிருந்தால் பிரச்சினை இல்லை என ஒருசாரரும், ஒருவேளை 8(1)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே அவர் தகுதியிழப்புக்கு ஆளாகிறார் எனவும் தீர்ப்பு குறித்து தெரிவிக்கின்றனர்.

தனக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்கும் படி வைகோ விடுத்த வேண்டுகோளை ஏற்று ஒரு மாதத்துக்கு தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்துள்ளார்.

No comments:

Post a Comment