Thursday, July 11, 2019

கல்முனை மக்களுக்கு யாழ் மேலாதிக்கம் வழமைபோல் அம்புலி மாமா கதை சொல்கின்றது. ரணில் கடிதம் கொடுத்துவிட்டாராம்..

கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கெதிராக ஜேவிபி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்து அரசினை கவிழ்க்கவேண்டும் என்பது கிழக்கு மக்களின் ஒருமித்த வேண்டுதலாக காணப்படுகின்றது. தமது இவ்வேண்டுதலை முன்நிறுத்தி கிழக்கு மக்கள் பல்வேறு போராட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏதிரான ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர் என்பது யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில், எவ்வித நிபந்தனையுமின்றி இன்று அரசுக்கு ஆதரவளிக்கவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஊடகக்கூலிகள் மூலம் கல்முனை மக்களுக்கு அம்புலி மாமா கதை கூற முனைந்துள்ளது. அவ்வாறு அரசிற்கு ஆதரவு வழங்குவதற்காக ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதாக எழுத்துமூல உறுதி மொழியை பெற்றுக்கொண்டுள்ளதாக அவ்வூடகங்கள் கதை சொல்கின்றது. அவ்வாறாயின் முடிந்தால் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உறுதிமொழிக்கடிதத்தை பகிரங்கப்படுத்துமாறு யாழ் மேலாதிக்க ஊடகங்களிடம் இலங்கைநெட் பகிரங்க சவால் விடுக்கின்றது.

இவ்விடயத்தில் கல்முனை தமிழ் மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு காட்டிக்கொடுப்பதுடன் அவர்களை நட்டாற்றிலும் விட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் கல்முனை தமிழ் மக்களுக்காக முஸ்லிம் மக்களை பகைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்ற பொருள்பட பாராளுமன்றில் பேசியதிலிருந்து கல்முனை மக்கள் சிறந்ததோர் பாடத்தினை கற்றுக்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கல்முனை பிரதேச செயலக விவகாரத்தை தனது அடுத்த தேர்தலுக்கான வாங்குவங்கியை பலப்படுத்தும் ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டிருக்கும் கோடீஸ்வரன் இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு நாளை கல்முனைக்கு உடையுடுத்து செல்லமுடியாது என்ற நிலையில், குறித்த கடிதக்கதையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நுனிக்கதிரையில் உக்காரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் இவ்வாறானதோர் வேண்டுதலை அவரிடம் வைக்க முடியாது என்பதனை இலங்கைநெட் மிகவும் தெளிவாக மக்களுக்கு தெரிவிக்கின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com