Wednesday, July 3, 2019

பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் தலாய் லாமாவுக்கு எதிராக, இலங்கை பிக்குகள் கண்டனப் பேரணி

மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவை கைது செய்யக்கோரி பௌத்த பிக்குகள் இணைந்து கண்டனம் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.

அஸ்கிரியப்பீட மகாநாயக்க தேரரின் இனவாத உபதேசத்திற்கு எதிராக கடும் கண்டனத்தை வெளியிட்டு சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்ற நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி நகரில் ஒன்றுதிரண்ட நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குமார்கள் ஸ்ரீதலதா மாளிகை வரை பேரணியாக சென்று கலாநிதி பாக்கியசோதியை கைதுசெய்யுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

கண்டி யட்டிநுவர தியகெலினாவ கித்சிறிமெவன் ரஜமகா விகாரையில் யூன் 16 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், மருத்துவர் சாஃபிக்கு எதிராக சிங்கள தாய்மார்களுக்கு பலவந்தமாக கருத்தடை செய்ததாக கூறி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுக்காக கல்லெறிந்து படுகொலை செய்ய வேண்டும் என்று உபதேசம் செய்திருந்தார்.

அதுமாத்திரமன்றி முஸ்லீம்கள் சிங்கள மக்களின் இனப்பெருக்கத்தை தடுப்பதற்காக உணவுகளிலும், பாணங்களிலும் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருவதாகவும் அதனால் முஸ்லீம்களின் கடைகளுக்கு சிங்களவர்கள் செல்லக்கூடாது என்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர் சிங்கள மக்களுக்கு உபதேசமும் செய்திருந்தார்.

மகாநாயக்கரின் இந்த இனவாதக் கூற்றுக்களுக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் இருவரும், அதேபோல் இனவாதத்திற்கு எதிரான சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தனர்.

அஸ்கிரிய மகாநாயக்கரின் இந்தக் கருத்தானது முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத கூற்று என்பதால் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்பாட்டு சட்டமான ICCPR இன் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலைத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவும் ஜனாதபிதி, பிரதமர் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரிக்கையும் விடுத்திருந்தார்.

அதேபோல திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய்லாமா, அஸ்கிரியப்பீட மகாநாயக்க தேரரின் இந்தக் கருத்திற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா ஆகியோரின் கருத்துகளுக்கு எதிராக கண்டி நகரில் ஒன்றுதிரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள், எதிர்ப்பு பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.

இந்தப் பேரணி கண்டி நகரிற்கு மத்தியில் ஆரம்பமாகி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக சென்று முடிவடைந்தது.

பௌத்த தலைமைத்துவத்தினை சர்வதேச ரீதியில் அகௌரவப்படுத்தியிருக்கும் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பேரணிக்கு தலைமை தாங்கிய முப்பீடங்களின் பிக்குகள் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளரான லியங்வெல சாசன ரத்தன தேரர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment