Tuesday, July 16, 2019

தேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.

இலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி பின்னர் அவர்களும் அதையே செய்தவர்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்து நாடளாவிய ரீதியில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இக்கருத்தானது மகா சங்கத்தினருக்கு பெரும் அவமானத்தை தேடித்தந்துள்ளதாகவும் , ரஞ்சன் தனது கருத்தினை வாபஸ்பெற்றுக்கொள்வதுடன் தேரர்களிடம் பௌத்தர்களிடமும் உடனடியாக மன்னிப்புக்கோரவேண்டும் என்ற கோரிக்கை பல தரப்புக்களிடமிருந்தும் பலமாக வெளிவந்தவண்ணமுள்ளது.

இது தொடர்பாக முதன்முதலில் எச்சரிக்கை விடுத்த மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பேப்பிட்டி சுமணதிஸ்ஸ தேரர், ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்புக்கோராதவிடத்து அவரது வாயை பாராங்கல்லுடன் உரசவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஞானசார தேரர் உட்பட பல தேரர்கள் கொதித்தெழுந்துள்ள நிலையில், இக்கருத்துதொடர்பாக விளக்கமளிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கள் ராமநாயக்கவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டுள்ள கருத்துகளை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில், எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் கடிதம் மூலம் விளக்கமளிக்குமாறு வேண்டி ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மறுபுறத்தில் பௌத்த தேரர்களை இழிவுபடுத்தியவர்களை இந்த நாட்டின் தலைமைகள் தண்டிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

காலி - போத்தல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இன்று இலங்கையில் வணக்கத்திற்குரிய பௌத்த தேரர்களை போன்று துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் தரப்பினர் வேறும் எவரும் கிடையாது.

கடந்த நான்கு ஆண்டுகளில் பௌத்த தேரர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டும் பல்வேறு விதமான துன்புறுத்தல்களுக்கு இலக்காகியும் உள்ளனர்.

பௌத்த தேரர்கள் மட்டுமன்றி ஏனைய மதத் தலைவர்களும் இழிவுபடுத்தப்படுகின்றனர். அண்மையில் பிரதி அமைச்சர் ஒருவர் பௌத்த தேரர்களை இழிவுப்படுத்தியுள்ளார்.

இது தற்செயலாக இடம்பெறும் செயலாக கருதப்பட முடியாது, இது பௌத்தர்களை ஆத்திரப்படுத்தி குழப்பம் விளைவிக்கும் நோக்கிலானது.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் பௌத்த தலைவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் அது பௌத்த மதத்திற்கும், நாட்டுக்கும் செய்யும் இழிவாகவே கருதப்பட வேண்டுமென மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment