முஸ்லிம்களின் உரிமையில் கை வைத்தால் பாணியை மாற்ற வேண்டி வருமாம்! மிரட்டுகிறார் ஹரிஸ்
எங்களின் நியாயத்தை மறுத்து அனாவசியமாக முஸ்லிம்களின் உரிமையில் கை வைத்தால் எங்களின் பாணியை மாற்ற நேரிடும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரிஸ் தெரிவித்தார்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு (06) சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் தலைமையில் கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீமின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பி. தயா கமகே, கௌரவ அதிதிகளாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம் ரஸ்ஸாக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக எல்லைக்குள் வசிக்கும் 1100 பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்,
ஒரு கையால் தட்டி சத்தம் வராது இரு கைகளும் இணைந்து தட்டி ஓசை எழுப்ப வேண்டுமானால் முஸ்லிம்களை சீண்டாமல் எங்களோடு இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முன்வாருங்கள்.
இந்த மாவட்டத்தின் எல்லா மத மக்களுக்கும் இந்த உதவி கிடைக்க வழிசமைத்த அமைச்சருக்கு மக்கள் பிரதிநிதியாக என்னுடைய நன்றிகள். இருந்தும் இந்த நாட்டில் இருந்து வறுமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
நாட்டில் பல நல்ல திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் வர இருக்கிறது. அதனை சரியாக பயன்படுத்தி எமது பிள்ளைகளை நன்றாக கல்விகற்க வைப்பதன் மூலம் நாம் அரேபிய நாடுகளுக்கு எமது பிள்ளைகளை தொழிலுக்கு அனுப்பவேண்டிய நிலை வராது.
ஸஹ்ரான் எனும் சிறிய குழுவினர் செய்த தாக்குதலின் பின்னராக அண்மைக் காலங்களில் எமது மக்களின் மீது நடக்கும் அநீதிகள் மனவேதனையாக உள்ளது. ஹபாயா, ஹிஜாப் அணிவதில் எமது பெண்களுக்கு வந்த சிக்கலையும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் போராடி வெற்றி பெற்றோம்.
கண்டியில் எமது அமைச்சர்களில் ஒருவரான றிசாத் அவர்களையும் முஸ்லிம் ஆளுநர்களையும் குறிவைத்து அத்துரலிய ரத்ன தேரர் இருந்த உண்ணாவிரதம் மூன்று நாட்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அது நாட்டுக்கு சமூகத்துக்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நான் எல்லோரையும் ஒன்று திரட்டி 09 அமைச்சர்களையும் இராஜினாமா செய்ய வைத்து நாம் இணைந்து பாதுகாத்தோம். இல்லாது போனால் இந்த நாடு இனவாதத்தில் தீக்கீரையாகி இருக்கும்.
இப்போது எமது பிரச்சினைகளை அரசாங்கம் தீர்த்து வைக்க முன்வருகிறது. ஜனாதிபதி தேர்தலை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ள இந்த காலகட்டத்தில் எமது இருப்புக்கு பாரிய சவால் இருக்கிறது.
எம்.எஸ். காரியப்பர், எம்.சி. அஹமத், ஏ.ஆர்.எம். மன்சூர், தலைவர் அஷ்ரப், போன்றோர்கள் கல்முனை மாவட்ட காரியாலயங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை அடங்கிய முக்கிய நகரமாக மாற்றியமைத்தவர்கள். கல்முனையை செதுக்கியத்தில் முஸ்லிங்களின் பங்கு அளப்பரியது. இதனை அறியாமல் தமிழ் முஸ்லிம் உறவை சீரழித்து கல்முனையை கூறுபோட மூன்றாம் தரப்பின் உதவியுடன் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வெளிமாவட்ட அரசியல் தலைவர்கள் இதனை வழிநடத்தி செய்கிறார்கள். அரசாங்கத்துக்கும், அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கும் ஒரு செய்தியை கூறியுள்ளோம். கல்முனை பிரிப்பதாக இருந்தால் ஆங்கிலயரின் ஆட்சி காலத்தில் இருந்தது போல பிரியுங்கள்.
கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, போன்ற பல நகரங்கள் தமிழ் மக்களின் பிரதான நகரங்களாக இருக்கிறது. ஆனால் கல்முனை மாநகரம் முஸ்லிம்களின் தாயகம் அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. முஸ்லிங்களின் உதவி இல்லாமல் தமிழர்களின் தீர்வுத் திட்டங்கள் ஒருபோதும் நடக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் தலைமைகள் நியாயமில்லாமல் நடக்கிறார்கள், அவர்கள் இதன் பின்விளைவுகளை சிந்திக்க வேண்டும். யாழில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் தழுதலுத்த குரலில் "தமிழர்களின் தீர்வு திட்டம் மழுங்கடிக்கப்படுகிறது, அரசாங்கம் ஏமாற்றுவதாக பேசினார்" தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயங்களை உணர்ந்து அவர்களுடன் கைகோர்க்க வேண்டிய உணர்வு முஸ்லிம்களுக்கு இருந்தது. ஆனால் சிறு பிரச்சினையை தீர்ப்பதற்காக முயற்சித்து தமிழ், முஸ்லிம் உறவில் நீண்ட இடைவெளியுள்ள விரிசலை ஏற்படுத்திவிட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment