நான் ஒரு முதுகெலும்புள்ள தலைவன். மார் தட்டுகின்றார் மைத்திரிபால சிறிசேன.
தன்னை முதுகெலும்பற்ற ஒரு தலைவராக சுட்டிக்காட்ட சிலர் முயற்சிக்கின்ற போதிலும், நேரடியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய முதுகெலும்புடைய ஒரு தலைவர் என்பதை 2015ஆம் ஆண்டு தேர்தலின்போதும் அதன் பின்னர் பல தடவைகளிலும் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
நேற்று (22) பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற 'சத்விரு அபிமன் 2019' இராணுவத்தினருக்கு நலன்புரி நன்மைகளை வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் :
கடந்த அரசாங்கத்தைப் போன்றே தற்போதுள்ள அரசாங்கத்திலும் இடம்பெறும் ஊழல், மோசடிகளை கண்டறிவதற்கு முதுகெலும்புடைய ஒரு தலைவர் என்பதனாலேயே ஆணைக்குழுக்களை நியமிக்க தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடத்தல்காரர்கள், பாதாள உலகத்தினர், குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகளுடன் போராடுவதற்கும் அதுவே காரணமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் சகல குற்றச்சாட்டுக்களையும் தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரான காலத்தில் அரசாங்கம் தனது அனைத்து கடமைகளையும் நிறைவேற்றியுள்ளதுடன், அத்தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பினை இலங்கையிலிருந்து ஒழித்தது மாத்திரமன்றி, அத்தாக்குதல் இடம்பெறுவதற்கு ஏதுவாக அமைந்த சகல விடயங்கள் தொடர்பாகவும் தற்போது பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதனால் தமது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தீர்மானங்களை முன்வைக்க வேண்டாமென தான் சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
தான் அனைத்து சமயங்களையும் மதிக்கும் ஒரு தலைவர் என்ற வகையில் அனைத்து மத தலைவர்களையும் போற்றுவதாக தெரிவித்தார். ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் யாராக இருப்பினும் அவை தொடர்பில் தம்முடன் வெளிப்படையாக கலந்துரையாட முடியுமெனவும், தேவையேற்படின் ஊடகங்களிற்கு முன்னாலும் அதனை மேற்கொள்ள முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
முதுகெலும்புடைய தலைவர்கள் மேற்கொள்ள வேண்டியது யாதெனில், விமர்சனங்களை முன்வைப்பது அன்றி கடத்தல்காரர்கள், குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி, நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவதாகும் எனக் குறிப்பிட்டார்.
விமர்சனங்கள் தேவையானவை என்றபோதிலும் அவை நாட்டையும் மக்களையும் தவறான வழியில் இட்டுச் செல்லக்கூடிய, அரசாங்கத்தை அசௌகரியங்களுக்கு உட்படுத்தக்கூடிய பாரதூரமான விமர்சனங்களாக அமையக்கூடாதெனவும் இன்று இந்த விமர்சனங்களை முன்வைக்கும் சகலரும் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னர் எமது வீரமிக்க இராணுவத்தினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறையினரும் தமது உயிரை துச்சமாக மதித்து நிறைவேற்றிய உன்னத மனித நேய செயற்பணிகளையே காட்டிக்கொடுக்கின்றனர் என தெரிவித்தார்.
மேலும் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தில் உயிரழிந்தவர்கள் தொடர்பில் அன்று போலவே இன்றும் தான் வேதனை அடைவதாகவும், அதனை ஒருபோதும் மறக்க முடியதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
முப்பது வருடங்களுக்கும் மேற்பட்ட கொடிய பயங்கரவாத யுத்தத்தை முடிவுறுத்திய வீரமிக்க இராணுவத்தினருக்கு பல்வேறு நலன்புரி நன்மைகள் இதன்போது பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன், முப்படையினர்இ பொலிசார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் இராணுவத்தினர் மற்றும் இராணுவத்தினரின் பிள்ளைகள் உள்ளிட்ட 1504 பேருக்கு இந்த நன்மைகள் வழங்கப்பட்டன.
அதற்கமைய முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகள், பகுதியளவில் நிறைவு செய்யப்பட்ட 925 வீடுகள், மாணவர்களுக்கான 308 புலமைப்பரிசில்கள் மற்றும் வசிப்பிடங்களுக்கான 246 காணித் துண்டுகளை வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.
0 comments :
Post a Comment