Thursday, July 18, 2019

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க கைது

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

சர்ச்சைக்குறிய எவன் கார்ட் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எவன் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேரை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி சமன் திஸாநாயக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு நேற்று நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதேநேரம் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த மீளாய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தவறியமைக்காக இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டமை, சட்ட விரோதமானது, அநியாயமானது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சரியான புலனாய்வுத் தகவல்களை புறக்கணித்து இரண்டு சந்தேகநபர்களும் நூற்றுக் கணக்கான உயிர்கள் பலிகொடுப்பதற்கு இடமளித்தமை கொலைக் குற்றச்சாட்டு என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment