தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. கூறுகின்றார் மஹிந்தர்.
'சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளைகளாக மாறியுள்ளனர். அவர்களை ரணிலிடம் இருந்து ஒருபோதும் பிரித்தெடுக்கவே முடியாது. அதனால்தான் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் ரணிலின் தலையை மீண்டும் காப்பாற்றியுள்ளனர்.'
– இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச.
அவர் மேலும் கூறியதாவது:-
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் முடிவில்தான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வெற்றி, தோல்வி தங்கியுள்ளது என்று நான் ஏற்கனவே தெரிவித்திருத்தேன். அதற்கமைய எல்லாம் நடந்து முடிந்துள்ளது.
பிரேரணை தொடர்பில் ரணிலுடன் அவரின் செல்லப்பிள்ளைகளான கூட்டமைப்பினர் பல தடவைகள் பேச்சுகள் நடத்துவது போல் பாசாங்கு செய்துவிட்டு அவரின் தலையை மீண்டும் காப்பாற்றிவிட்டனர்.
பிரேரணையை கூட்டமைப்பினர் எதிர்ப்பார்கள் என்றுதான் நாம் நினைத்திருந்தோம். அதன்படி அவர்கள் செய்துள்ளார்கள். அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தமிழ் மக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். தீர்மானம் தோற்றாலும் இந்த அரசு கவிழ்வது உறுதி. அது விரைவில் நடக்கும்' – என்றார்.
இதேநேரம் 'பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து இந்த நாட்டை அழிக்கின்றார்கள். இவர்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் தக்க பாடம் புகட்ட வேண்டும்.' என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.
அவர் மேலும் கூறியதாவது:-
'அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ரணில் அரசைக் கவிழ்க்க நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், அதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இல்லாமலாக்கி விட்டார்கள். கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தபடியால் ரணில் அரசு மீண்டும் காப்பாற்றப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு இந்த அரசு பொறுப்பேற்று ஆட்சியை எம்மிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். இந்த அரசு தொடர்ந்து ஆட்சியில் இருப்பது அவர்களுக்குத்தான் வெட்கக்கேடு.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து இந்த நாட்டை அழிக்கின்றார்கள். இவர்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியே ஆட்சியமைக்கும். அழிவடைந்து கொண்டிருக்கும் இந்த நாட்டுக்கு நல்ல காலம் விரைவில் பிறக்கும்' – என்றார்.
0 comments :
Post a Comment