கிழக்கு அரசியல்வாதிகளே இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு அடித்தளமிடுகின்றனர்! சாடுகின்றார் ஞானசார தேரர்
கொழும்பில் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் கருத்துரைக்கும் ஒருசில கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு அங்கு அடித்தளமிடுகின்றார்கள். முறையற்ற செயற்பாடுகளை மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுக்கு எதிராக அனைத்து சாட்சியங்களையும் விரைவில் நாட்டு மக்களிடம் பகிரங்கப்படுத்துவோம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் சேவையாற்றும் பொலிஸார் தமது பொறுப்புக்களை முறையாகப் பின்பற்றாமையின் காரணமாகவே அங்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் தழைத்தோங்கியது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையிலுள்ள பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பொதுபல சேனா அமைப்பின் தலைமை காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஏப்ரல் 21 ஈஸ்டர்தின குண்டுத்தாக்குதலின் சுவடுகள் இன்றும் சமூகத்தின் மத்தியிலிருந்து முழுமையாக மாறவில்லை. தேசிய பாதுகாப்பு பலப்படுத்த வேண்டுமாயின் ஓர் உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். அடிப்படைவாதி சஹ்ரானின் குண்டுத்தாக்குதல் நாட்டில் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்து போல் தற்போது பாதுகாப்பு பிரிவினரால் நோக்கப்படுகின்றது.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க எந்த விடயங்களை முறையாகப் பின்பற்ற வேண்டுமோ அதில் எவரும் கவனம் செலுத்தவில்லை. தேவையற்ற விடயங்களுக்கே பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் தரப்பினர் முழுமையான கவனம் செலுத்துகின்றார்கள்.
கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுப்பெறுவதற்கு பொலிஸாரின் பலவீனமே முக்கிய காரணியாக காணப்படுகின்றது. சஹ்ரான் உள்ளிட்ட அடிப்படைவாதிகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபோது அடிப்படைவாதிகளுக்கு எதிராக பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. பாதுகாப்புப் பொறுப்பிலிருந்த அனைவரும் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டும். இதில் கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் சேவையிலிருந்து கடமையை முறையாகப் பின்பற்றாதவர்களும் உள்ளடக்கப்படுவார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடமாற்றம் செய்யப்படும் பொலிஸ் அதிகாரிகள் தங்களுக்கு தமது மேலதிகாரிகளினால் வழங்கப்பட்ட ஒரு தண்டனை என்றே கருதுகின்றார்கள். இதனால் நெருக்கடி ஏற்படக்கூடிய அரசியல் தலையீடுகள் உள்ள விடயங்களில் கவனம் செலுத்துவது இல்லை. தமது மேலதிகாரியை பழிவாங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒட்டுமொத்த மக்களையும் நெருக்கடிக்குள் இன்று தள்ளியுள்ளார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையிலுள்ள பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமாயின் கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் பிரிவில் திருத்தங்கள் கொண்டுவருதல் அவசியமாகும்.
கிழக்கு மாகாண ஒருசில அரசியல்வாதிகளே இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு ஆரம்ப காலத்திலிருந்து அடித்தளமிட்டுள்ளார்கள். குண்டுத்தாக்குதலை தொடர்ந்தும் அவர்களின் முறையற்ற செயற்பாடுகள் மாறவில்லை. கொழும்பிற்கு வந்து இன நல்லிணக்கம் பற்றி பேசிவிட்டு கிழக்கிற்கு சென்று அடிப்படைவாதம் வலுப்பெற அனைத்து உதவிகளையும் அரசியல்வாதிகளே செய்கின்றார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு ஆதரவு வழங்கி முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்துள்ள அரசியல்வாதிகளின் அனைத்து சொத்து விவரங்களையும் வெகுவிரைவில் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம் என்றார்.
0 comments :
Post a Comment