Tuesday, July 2, 2019

பிபாகரன் போதைப்பொருள் வியாபாரத்தின் ஊடகவே இயக்கத்திற்கு ஆயுதங்கள் வாங்கினார். மைத்திரி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சட்டவிரோத போதைப் பொருட்களின் ஊடாகவே தமக்கான வருமானத்தை பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலினால் பெற்றுக் கொள்ளப்பட்ட வருமானத்தின் ஊடாகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத கொள்வனவு உள்ளிட்ட தமக்கான தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேபோன்றே, சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுக்கும், போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்ளும் அமைப்புக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும், சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தாம் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே மேற்கொண்டு வருவதாகவும், அதனை தாம் முழுமையாக நிறைவேற்றுவதாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.

சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் தனது தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பை தெரிவித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் பட்சத்தில், ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை நிறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தமது நாட்டுக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுயாதீன நாடொன்றின் மீது எந்தவொரு தரப்பிற்கும் அழுத்தங்களை மேற்கொள்ள முடியாது என கூறிய ஜனாதிபதி, இலங்கை சுயாதீன நாடாக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு, வெளிநாடுகளின் உதவிகள் அத்தியாவசம் என சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் சுயாதீன செயற்பாடுகளை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தி, உதவிகளை பெற்றுக் கொள்ளும் தேவை தமக்கு கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

மரண தண்டனை நிறைவேற்றும் தனது தீர்மானம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தன்னுடன் தொலைபேசியூடாக தொடர்புக் கொண்டு வினவியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், புனர்வாழ்வு மத்திய நிலையங்களில் புனர்வாழ்வளிப்பதற்கான இடவசதிகள் கூட கிடையாது எனவும் தான் ஐநா பொதுச் செயலாளருக்கு தெளிவூட்டியதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு, துஷ்பிரயோகங்கள், நோய்களின் அதிகரிப்பு, வறுமை நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு பேதைப்பொருள் பயன்பாடு காரணம் என்பதையும் தான் ஐநா பொதுச் செயலாளருக்கு தெளிவூட்டியதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான இதுவரை தனக்கு எந்தவொரு தரப்பினரும் உதவிகளை வழங்கவில்லை என கூறிய ஜனாதிபதி, தனது தீர்மானத்திற்கு எதிராக எவராலும் செயற்பட முடியாது எனவும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் பயன்பாட்டினால் சட்டவிரோதமான முறையில் 50 பில்லியனுக்கும் அதிக தொகை போதைப்பொருள் வர்த்தகர்கள் பெற்றுக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் 80 சதவீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே சிறைவாசம் அனுபவித்து வருவதாகவும் கூறினார்.

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் 11,000 பேர் மாத்திரமே தங்க வைக்க முடியும் என கூறிய ஜனாதிபதி, சிறைச்சாலைகளில் தற்போது 24,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கையில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு ஆண்களை விட, பெண்களே அதிகளவில் அடிமையாகியுள்ளமை, ஆய்வுகளின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இவ்வாற நிலைமையில், இலங்கையில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, நாட்டை சிறந்த வழிக்கு முன்கொண்டு செல்ல மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டியது கட்டாயம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

(பிபிசி தமிழ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com