இந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் பல்வேறு சம்பிரதாயபூர்வமான செயற்பாடுகளை சவாலுக்குள்ளாக்கியுள்ளனர். அந்தவகையில் இலங்கையில் திருமணமாவதற்கு பெண்கள் 18 வயதினை பூர்த்தி செய்திருக்கவேண்டும் என்ற சட்டம் முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவானதாக அமையவேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஒன்றுகூடிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையை 18 ஆக அதிகரிப்பதற்கும், முஸ்லிம் பெண்களை காதி நீதிபதிகளாக நியமிப்பதற்கும், விவாகரத்து வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு மத்தாஹ் (நஷ்டஈடு) பெற்றுக் கொடுப்பதற்கும் இணங்குவதென ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.
மேற்படி விட்டுக்கொடுப்புக்களுக்கு தயாராகும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் ராஜனாமா செய்துகொண்ட பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்வதெனவும் தீர்மானித்துள்ளனர்.
திருமணங்கள் விவாகரத்து தொடர்பான 1951ம் ஆண்டு சட்டத்தில் முஸ்லிம் பெண்கள் 12 வயதில் திருமணமாகலாம் என விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் திருத்தத்தினை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவானது வயதெல்லையை 16 அல்லது 18 ற்கு உயர்த்தவேண்டும் என பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment