Monday, June 10, 2019

Zero Chance! நடுக்கடலில் வைத்து திருப்பி அனுப்பப்படுவீர்கள். அவுஸ்திரேலியாவின் எச்சரிக்கை. Major General Craig Furini

அவுஸ்திரேலியாவை அடையும் நோக்கில் இடம்பெறும் படகு வழி ஆட்கடத்தல்களை தடுக்க ஜீரோ சான்ஸ்(Zero Chance) எனும் புதிய பிரச்சாரத்தை அவுஸ்திரேலியா முன்னெடுத்து வருகின்றது. கடந்த 2013ல் அவுஸ்திரேலியா முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கையின் தொடர்ச்சியாக இந்த பிரச்சாரம் நடவடிக்கைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கட்டளை அதிகாரி க்ரைக் புரினி, 'அண்மையில் முடிந்த ஆஸ்திரேலிய தேர்தலைத் தொடர்ந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்க முயற்சிக்கும் ஆட்கடத்தும் படகுகள் அனைத்தையும் நிறுத்தும்படி பிரதமர்(ஸ்காட் மாரிசன்) எனக்கு அறிவுறுத்தியிருக்கிறார்,' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

' அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத படகுப் பயணத்திற்கு முயற்சிப்பீர்களேயானால், நீங்கள் தடுத்து நிறுத்தப்படுவீர்கள். எப்போதும் போல எமது எல்லைகள் உறுதியானவை. நீங்கள் வெற்றிக்கரமாக உள்ளே நுழைவதற்கான வாய்ப்பு அறவும் கிடையாது,' என கட்டளை அதிகாரி புரினி எச்சரிக்கை காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

கடந்த காலங்களில், அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த தஞ்சக்கோரிக்கையாளர்கள் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர்.

சமீபத்தில், இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், 'ஆட்கடத்தல்காரருக்கு நீங்கள் பணம் கொடுத்தால், நீங்கள் பணத்தை இழப்பீர்கள். உடனடியாக நீங்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவீர்கள்,' என எச்சரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com