Tuesday, June 11, 2019

முஸ்லிம் எம்பிக்கள் மாகாநாயக்க தேரர்கள் சந்திப்பு. விசாரணை முடியும்வரை அமைச்சுப்பதவி வேண்டாமாம்.

“உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடந்து முடிவடையும் வரை அமைச்சுப் பதவிகளை நாம் ஏற்கப்போவதில்லை.”

– இவ்வாறு மகாநாயக்க தேரர்களிடம் கூட்டாகத் தெரிவித்தனர் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

ரவூப் ஹக்கீம் – ரிஷாத் பதியுதீன் தலைமையிலான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று கண்டியில் நடைபெற்றது.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் இனவாத நடவடிக்கைகள் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளைக் கூட்டாகத் துறந்தமை உள்ளிட்ட பல தரப்பட்ட விடயங்களை மகாநாயக்க தேரர்களுக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கினர்.

எனினும், முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றாகப் பதவி விலகியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், குற்றம் சுமத்தப்படாதவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக ரிஷாத் பதியுதீன் விசாரணைகளுக்கு முகம்கொடுத்து தன்னைக் ‘க்ளியர்’ செய்துகொள்ள வேண்டும் எனவும் மகாநாயக்க தேரர்கள் கேட்டுக்கொண்டனர்.

இங்கு பேசிய ரிஷாத் பதியுதீன், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களின் போலித்தன்மை குறித்து நீண்ட விளக்கமளித்தார்.

இதற்குப் பதிலளித்த மகாநாயக்க தேரர்கள், “ரிஷாத் பதியுதீன் தன் மீதான விசாரணை நிறைவடையும் வரை அமைச்சுப் பதவியிலிருந்து விலகியிருக்கட்டும். ஆனால், விசாரணையை எதிர்கொள்ளாத ஏனையவர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுச் செயற்பட வேண்டும்” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.

எவ்வாறாயினும், “ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதால் உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முடிவடைந்து நியாயமான ஒரு தீர்ப்புக் கிடைக்கும்வரை அமைச்சுப் பதவிகளை நாம் ஏற்கப்போவதில்லை” என்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகத் தெரிவித்தனர்.

இதேவேளை, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துவரும் கருத்துக்கள் குறித்து கடும் அதிருப்தியை மகாநாயக்க தேரர்கள் வெளியிட்டனர். அந்தக் கருத்துக்களில் தங்களுக்கும் உடன்பாடு இல்லை என்று மகாநாயக்க தேரர்களிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதுடன் அதற்காக வருத்தத்தையும் தெரிவித்தனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com