அரபுக்கல்வி தொடர்பான சட்ட வரைபு நிராகரிப்பு.
இலங்கையில் இஸ்லாமியக் கல்வி (அரபுக்கல்லூரிகள்) தொடர்பான சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தொடர்ந்து முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீமினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டவரைபு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சட்ட திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , அமைச்சர் சம்பிக்க ரணவக்க , நீதியமைச்சர் தலதா அத்துக்கொரல மற்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழுவிடம் முஸ்லிம் விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட சட்டவரைபே நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை முற்றாக மாற்றம் செய்து நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டவரைபொன்றை முன்வைக்குமாறு வேண்டப்பட்டுள்ளது.
இஸ்லாமியக் கல்வி முற்றுமுழுதாக கல்வி அமைச்சின் பூரண கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படக்கூடியவாறு சட்டமூலம் அமையப்பெறவேண்டும் என்றும் அவ்வாறனதோர் முன்மொழிவு வரும்போது அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதி பெறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து அரபுக் கல்லூரிகளில் அடிப்படைவாதம் போதிக்கப்படுவதாகவும் அரபுக் கல்லூரிகள் தடை செய்யப்பட வேண்டுமெனவும் பெரும்பான்மை இனத்தவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அரபுக் கல்லூரிகளுக்கென தனியான சட்ட மூலமொன்றினைத் தயாரிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமுக்கு பணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment