Saturday, June 8, 2019

ரத்ன தேரரின் உயிர் தொடர்பில் கவனம் செலுத்தியே பதவி விலகினார்களாம்! மஹிந்தவிடம் முஸ்லிம் எம்பிக்கள்.

அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்த சகலரும் இன்று (08) எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஒரு அமைச்சர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டதற்காக முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒரே முறையில் அரசாங்கத்தின் பதவிகளிலிருந்து விலகியதை தான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் இவ்விடயமானது சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்தும் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ எச்சரித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் சங்கைக்குரிய அத்துரலிய தேரரின் உயிரில் அவதானம் செலுத்தியே அவ்வாறு செய்து கொண்டதாகவும், எக்காலத்திலும் இனங்களுக்கிடையே முரண்பாடுகள் இடம்பெறும் வகையில் நடந்துகொள்ளப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இன ரீதியாக ஒன்றாக இருந்து அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாகவும், இதன்காரணமாகவே தாம் அரசாங்கத்தின் பதவிகளிலிருந்து வெளியேறியதாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அடிப்படைவாதத்துக்கு தாம் எதிரானவர்கள் எனவும், சகல மக்களும் ஒன்றாக வாழும் சூழலை உருவாக்குவது தமது எதிர்பார்ப்பாகும் எனவும் அவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், ரிசாட் பதியுத்தீன், ஏ.எச்.எம். பௌசி உட்பட முஸ்லிம் எம்.பிக்கள் ஏழுபேர் கலந்துகொண்டுள்ளனர். எதிர்க் கட்சி சார்பில் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

மஹிந்த ராஜபச்சவின் விஜேராம இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பிற்கு றிசார்ட் பதுயுதீன் சிவப்பு நிற சேட் அணிந்து சென்றிருந்தார். அதாவது அடுத்த தேர்தலில் நான் சிவப்பு நிறத்தில் தாமரை மொட்டிலேயே போட்டியிடுவேன் என்பதற்கான சமிக்கையாகவே அது அமைந்திருந்தாக நம்பப்படுகின்றது.






No comments:

Post a Comment