தெரிவுக்குழுவை முடக்க உச்சத்திற்கு செல்லும் மைத்திரி, சேவையிலுள்ள அதிகாரிகளை சாட்சியளிக்க விடமாட்டாராம்.
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் வரழைக்கப்பட்டு அரச புலனாய்வுத் தகவல்கள் ஊடகங்களின் முன்னிலையில் வெளிப்படுத்தப்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. இதுவரையில் தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரிகளாவர். எனவே, தற்போது சேவையிலுள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எவரையும் தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க நான் அனுப்பப் போவதில்லை. அவர்களது செயற்பாடுகள் தொடர்பான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கின்றேன்.”
– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான மாதாந்தக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி மைத்திரி இதனைக் கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான 05 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டுவரும் பின்னணியில் தெரிவுக்குழுவொன்றை நியமித்து விசாரணை செய்தல் உயர்நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என சட்டமா அதிபர் எனக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார். நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் நான் அதனைச் சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளேன்.
ஜனாதிபதி ஒருவரினால் சமர்ப்பிக்கப்படும் அத்தகைய கடித ஆவணங்கள் நாடாளுமன்ற அமர்வின் தொடக்கத்திலேயே சம்பிரதாயபூர்வமாக சபாநாயகரினால் முன்வைக்கப்படுகின்ற போதிலும் சபாநாயகர் இவ்விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் எதுவித கருத்துக்களையும் வெளியிடாமை தொடர்பில் நான் வருத்தமடைகின்றேன்” – என்றார்.
பொலிஸ் திணைக்கள தலைமையகக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு ஜாவத்த பிரதேசத்திலுள்ள சலுசல தலைமை அலுவலகத்துக்குச் சொந்தமான காணியைப் பொலிஸ் திணைக்களத்துக்குக் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார். அத்துடன், அரசுக்கு சுமையாகக் காணப்படுகின்ற, உரிய முறையில் இயங்காத சலுசல பணிப்பாளர் சபையைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்தார்.
பொலிஸ் அதிகாரிகளின் பதவியுயர்வுகள் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அப்பதவியுயர்வுகள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் தற்போது சம்பள ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன எனவும், அவர்களது அனுமதியையும் பெற்றுக்கொண்டதன் பின்னர் வெகுவிரைவில் மூன்று பிரிவுகளின் கீழ் குறித்த பதவியுயர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படைக்குப் புதியதொரு படையணியொன்றை இணைத்துக்கொள்வதற்கான அனுமதியையும் ஆயுதங்களையும் பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நச்சுத்தன்மையான போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
0 comments :
Post a Comment