Thursday, June 27, 2019

மத நல்லிணக்கத்தில் அடைக்கலம் தேடுவோரை நிர்மூலமாக்கும் நாதன்கள். சிவசேனை மறவன்புலவு க சச்சிதானந்தன்

சமயங்களிடையே நல்லிணக்கம் வேண்டும், அன்பில் திளைக்க வேண்டும் அறம் செழிக்க வேண்டும், அருள் பெருக வேண்டும் என நல்ல நோக்கங்கள் கொண்டவர்கள் மாந்தை மேற்குப் பிரதேச சபையினர்.

திருக்கேதீச்சரத்திற்குச் செல்லும் சாலை மாந்தைச் சந்தியில். அந்தச் சாலைக்குப் பெயரே திருக்கேதீச்சரம் சாலை.

கற்குளத்துக்குச் செல்லும் சாலைச் சந்தியில் கிருத்தவ வரவேற்பு வளைவு. மடுமாதா அருட் கோயிலுக்குச் செல்லும் சாலைச் சந்திப்பில் கிருததவ வரவேற்பு வளைவு. கற்குளத்திலே சைவக்கோயில்கள் உள்ளன மடுப் பிரதேசத்திலே சைவக்கோயில்கள் உள்ளன ஆனாலும் சந்திப்பில் கிறித்தவ வரவேற்பு வளைவுகள்.

சைவக்கோயில்கள் உள்ளே கிராமங்களில் இருப்பதால் அந்த வரவேற்பு வளைவுகளுக்கு முன்பு பிள்ளையார் கோயிலையோ முருகன் கோயிலையோ எவரும் கட்டவில்லை. சைவ சமய நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டுகள்.

ஆனால் தலைமன்னார் நெடுஞ்சாலையில் திருக்கேதீச்சரத்துக்கான சைவ வரவேற்பு வளைவுக்கு முன்னே கிறித்தவ உலூர்து அம்மாளுக்குச் சிறிய கோயில்! என்ன கொடுமை?

நல்லிணக்கத்தைப் பேணும் மாந்தை மேற்குப் பிரதேச சபையின் தீர்மானம். மாந்தைச் சந்தியில் திருக்கேதீச்சரம் சாலையில் நிலையாக அழகான சைவ வரவேற்பு வளைவு கட்டுவதற்குத் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை உரிமம் வழங்கும் தீர்மானம்.

உறுப்பினர்களாகச் சைவர்கள் கிறித்தவர்கள் முகமதியர்கள் மாந்தைப் பிரதேச சபையில் உள்ளனர். ஒருமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

அந்தோ தலையிட்டனர் கத்தோலிக்கர். ஆயர் ஆலோசனை வழங்குகிறார். தொடர்பே இல்லாத நானாட்டான் பிரதேச சபை சைவ வரவேற்பு வளைவு கட்ட வேண்டாம் எனத் தீர்மானம் இயற்றுகிறது.

மாந்தையில் மிகச் சிறுபான்மையினராக வாழ்கின்ற கத்தோலிக்கரின் கிராம முன்னேற்றச் சங்கமும் அவ்வாறான தீர்மானத்தை இயற்றுகிறது. கிராம முன்னேற்றச் சங்கத்தின் தீர்மானத்தில் எழுதிய வரிகள் அப்பட்டமான வரலாற்றுத் தவறுகள் கொண்ட வரிகள். கற்பனைச் செய்திகளை வரலாறாக எழுதிக் கொடுத்தவர் ஆயர் இல்லத்தில் உள்ளவர்கள் போலும்!

அதைவிடக் கொடுமை என்னவென்றால் மாந்தைச் சைவ வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்ற இருவர் ஆயருக்குப் பக்கபலமாக நிற்கிறார்கள். திருக்கேதீச்சரம் சாலை முகப்பில் சைவ வரவேற்பு வளைவு அமையக்கூடாது என உறுதியாக இருக்கிறார்கள்.

சைவ வாக்காளரின் வாக்குகளைப் பெறும் போது பல்லிளித்துப் பெற்றீர்களே நகைமுகம் காட்டிப் பெற்றீர்களே. இன்று அந்த வாக்காளர்களுக்குப் பச்சைத் துரோகம் செய்கிறீர்களே. மாந்தைப் பிரதேச சபையின் மதநல்லிணக்க முயற்சியை முறியடிக்கிறீர்களே.

திரு செல்வம் அடைக்கலநாதனும் திரு சாரள்சு நிர்மலநாதனும் திருக்கேதீச்சரம் சாலை முகப்பில் சைவ வரவேற்பு வளைவு வைக்கக்கூடாது என ஆயருக்குப் பக்கபலமாக மாந்தைப் பிரதேச சபைக்குச் சொல்லி இருக்கிறார்கள் என்பதை இணைய தளங்களில் படிக்கும் பொழுது நெஞ்சு வெடிக்கிறது மனம் துடிக்கின்றது கொடுமையின் முகங்களைக் காண்கிறேன்.

சிங்களப் பெரும்பான்மையினர் தமிழ்ச் சிறுபான்மையினருக்குக் ரகொடுமை விளைவிக்கிறார்கள் என உலகெங்கும் கூறிய ஆயர் இராயப்புவின் வழித்தோன்றல்கள் அவரின் விதப்புரையில் நாடாளுமன்ற உறுப்பினர்களானோர் இன்று கத்தோலிக்கப் பெரும்பான்மையினரின் கொடும் பிடியை இறுக்கிச் சைவச் சிறுபான்மையினரை நசுக்குகிறார்கள் மன்னார் மாவட்டத்தில்.

சைவர்களே விழித்தெழுங்கள் மன்னார் மாவட்டத்தில் சைவர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனாலே உங்களுடைய வலிமை பெருகும். உங்கள் கோயில்களுக்கு நீங்கள் வளைவுகளை அமைக்கலாம். உங்கள் வழிபாட்டிடங்களில் இயல்பாக நீங்கள் வழிபட்டு அருள் பெருக்கலாம் அன்பை வியக்கலாம் அறத்தைப் பரப்பலாம்.

No comments:

Post a Comment