பாக். ராணுவம், ஐஎஸ்ஐ அமைப்பை விமர்சித்த இளம் பத்திரிகையாளர் கழுத்தறுத்துக் கொலை.
பாகிஸ்தான் ராணுவத்தையும், உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ அமைப்பையும் விமர்சித்த 22 வயது இளம் பத்திரிகையாளர், பிளாக்கர் அடையாளம் தெரியாத நபரால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ அமைப்புக்கு புதிய தலைவராக ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஹமீது நியமிக்கப்பட்ட 24 மணிநேரத்துக்குள் இந்தக் கொலை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொலையை யார் செய்தது எனத் தெரியாத நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முகமது பிலால் கான் பத்திரிகையாளராகவும், வலைதளத்தில் எழுதும் எழுத்தாளராகவும் இருந்தார். இவருக்கு ட்விட்டரில் 16 ஆயிரம் ஃபாலோயர்களும், யூடியூப்பில் 48 ஆயிரம் பேரும், ஃபேஸ்புக்கில் 22 ஆயிரம் பேரும் ஃபாலோயர்களாக இருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு ஒரு நண்பர் அழைக்கிறார் என்று வீட்டை விட்டு வெளியே சென்ற முகமது பிலால் கான், காட்டுப்பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார்.
யாரோ சில மர்ம நபர்கள் முகமது பிலால் கானை அழைத்துச் சென்று கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் எஸ்.பி. சதார் மாலிக் நதீம் தெரிவித்தார். மேலும், காட்டுப்பகுதியில் இரவுநேரத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவம் மக்கள் தெரிவித்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
முகமது பிலால் கானுடன் சென்ற நண்பரும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
முகமது பிலால் கான் கொல்லப்பட்டபின், ஜஸ்டிஸ் 4 முகமது பிலால்கான் என்ற ஹேஷ்டேக் பாகிஸ்தானில் பிரபலமாகி வருகிறது.
மேலும், சமூக ஊடங்களில் இருப்பவர்கள் பிலால் கானின் கொலைக்குக் காரணமான பாகிஸ்தான் ராணுவத்தையும், ஐஎஸ்ஐ அமைப்பையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் ரேஹம் கான் ட்விட்டரில் கூறுகையில், "இளம் பத்திரிகையாளர் கான் மறைவு குறித்து என்னால் பேச வார்த்தைகள் இல்லை. மிகவும் துணிச்சலான பத்திரிகையாளர். நேர்மையானவர்கள் எந்த வார்த்தையும் பேசமுடிவதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த கனடா பத்திரிகையாளர் தெஹ்ரீக் பத்தா ட்விட்டரில் கூறுகையில், "ஐஎஸ்ஐ அமைப்பின் புதிய தலைவர் ஹமீதை விமர்சித்த சில மணிநேரங்களில் பத்திரிகையாளர் பிலால் கான் கொல்லப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
நன்றி தமிழ் த ஹிந்து
0 comments :
Post a Comment