கல்முனையை இஸ்லாமிய ராஜ்ஜிமாக்க ஐ.தே.க துணைபோகின்றது. சாடுகிறார் கோடீஸ்வரன்! ரிஎன்ஏ யும் துணை என்கிறார் விமல்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் எனக் குறிப்பிடப்படும் தமிழ் மக்களுக்கான பிரதேச செயலகம் கடந்த 30 வருடங்களாக இயங்கி வருகின்றது. இப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதாக பல தடவைகள் அமைச்சரவையில் தீர்மானித்திருந்தபோதும் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சரவையால் எட்டப்பட்ட தீர்மானம் முஸ்லிம் அமைச்சர் ஒருவரது தலையீட்டால் கைவிடப்பட்டதாக நேரடியாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்முனை விகாரையின் விகாராதிபதி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. இவ்வுண்ணாவிரம் தொடர்பில் பாராளுமன்றில் பேசிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், இஸ்லாமியப் பயங்கரவாதிகளான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு தடையாக உள்ளதாகவும் இவர்கள் கல்முனையை இஸ்லாமிய ராட்சியமாக மாற்ற முனைவதாகவும் தெரிவித்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசானது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலேயே செயற்பட்டு வருவதாக கூறினார்.
கோடீஸ்வரனின் மேற்படி கூற்றானது 100 வீதம் உண்மையானது என தெரிவித்த பா.உ விமல்வீரவன்ச, இன்றைய அரசாங்கமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவிலேயே இயங்கி வருகின்றது. தமிழ் மக்களின் நியாமான பிரச்சினை தீரவேண்டுமானல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசிற்கு பாரிய அழுத்தத்தை கொடுக்கவேண்டும். அத்துடன் அவர்கள் அரசிற்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தவேண்டும். அவ்வாறு ஆதரவு வழங்குவதை நிறுத்தினால் அரசு இயங்கமுடியாது. அரசு இயங்கவேண்டுமானல் அந்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்தவேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த வியூகத்தை ஏன் இதுவரை கையாளாமல் உள்ளது என்று கேட்டார் விமல் வீரவன்ச.
எது எவ்வாறாயினும் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணா நோன்பு இருந்துவரும் கல்முனை விகாராதிபதி இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகின்றார். அவரது உடல்நிலை பாதிப்புற்றுவருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ள நிலையில் நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பல்வேறு தேரர்கள் அங்கு விரையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment