ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதைத் தடுக்கும் ஓர் உலகளாவிய பிரச்சாரத்திற்காக!
அவரது சுதந்திரத்தைப் பாதுகாக்க ஓர் உலகளாவிய பாதுகாப்பு குழுவை உருவாக்குவதற்காக!
உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) இணைந்திருக்கும் சோசலிச சமத்துவக் கட்சிகளும் (SEP) விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதை நிறுத்துவதற்காகவும், அவரினதும் மற்றும் இரகசிய ஆவண வெளியீட்டாளர் செல்சியா மானிங்கினதும் விடுதலைக்காகவும் ஓர் உலகளாவிய பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கின்றன.
கூட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொது விவாதங்கள் என சர்வதேச அளவில் போராட்ட நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதன் மூலமாக மட்டுமே, ஜூலியன் அசான்ஜை மவுனமாக்கவும் அழிக்கவும் செயல்பட்டு வரும் பிற்போக்குத்தனமான அரசாங்கங்களின், அவற்றின் உளவுத்துறை முகமைகள் மற்றும் அரசியல் முகவர்களின் திட்டங்களை தகர்த்து தோற்கடிக்க முடியும். ஜூலியன் அசான்ஜினை பாதுகாப்பதற்கும், உண்மையில் அனைத்து தொழிலாளர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கும், மக்கள்தொகையில் பாரிய பெரும்பான்மையாக இப்புவியில் மிகவும் சக்தி வாய்ந்த சமூக சக்தியாக விளங்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் எழுச்சி பெறச் செய்வதும் அணிதிரட்டுவதுமே இப்பிரச்சாரத்தின் நோக்கமாக இருக்கவேண்டும்.
ஜூன் 12 அன்று, பிரிட்டிஷ் உள்நாட்டு செயலர் சாஜித் ஜாவித் வெளிநாட்டிடம் ஒப்படைக்கும் நடைமுறைகளுக்குச் சான்று வழங்கி, அமெரிக்காவிடம் ஜூலியன் அசான்ஜை விசாரணை கைதியாக ஒப்படைப்பதுடன், பெப்ரவரி 2020 இல் முடிவடைய உள்ள அரசியல்ரீதியில் மோசடியான ஒரு போலி-சட்டபூர்வ நடைமுறைகளைத் தொடங்கி வைத்தார்.
அசான்ஜைப் பிடித்து வைத்திருப்பதற்கு எந்த அடித்தளமும் இல்லை என்று ஒரு சுவீடன் நீதிபதி குறிப்பிட்டு வெறும் ஒரு வாரத்திற்குப் பின்னர், வெளிநாட்டிடம் ஒப்படைக்கும் இந்த நடைமுறைக்கு உள்துறை செயலர் முத்திரை குத்தியிருப்பது, அசான்ஜின் மதிப்பைக் கெடுத்து தனிமைப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ள பொய்களை அம்பலப்படுத்துகிறது. ஆரம்பத்தில் இருந்தே, அமெரிக்கா, பிரிட்டன், சுவீடன் மற்றும் ஆஸ்திரேலியாவில் அரசு அதிகாரிகளின் நோக்கம் ஏகாதிபத்திய போர் குற்றங்களை அம்பலப்படுத்திய இந்த துணிச்சலான பத்திரிகையாளரை மவுனமாக்கி அழிப்பதாக இருந்துள்ளது. இரும்பு இதயம் கொண்டவரும் மனித கண்ணியம் மற்றும் நேர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் செல்சியா மானிங்கும் அதேபோல அழிவுக்கான இலக்கில் வைக்கப்பட்டுள்ளார்.
செல்சியா மானிங்
ஜூலியன் அசான்ஜைக் கையாள்வதில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒவ்வொரு அம்சமும் நீதியைக் கேலிக்கூத்தாக ஆக்குவதாக உள்ளது. ஜூன் 13 இல் பிபிசி வானொலி 4 க்கு வழங்கிய பேட்டியில், பிரிட்டிஷ் உள்துறை செயலர் சாஜித் ஜாவித் இவ்வாறு பெருமைபீற்றினார்: “முதலாவதாக பொலிஸ் அவரை [அசான்ஜை] கைது செய்ததற்காகவும், அவர் பிரிட்டன் சட்டத்தை உடைத்ததற்காக இப்போது அவர் சரியாகவே சிறை கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார் என்பதிலும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.” உண்மையில் அசான்ஜ் எந்த சட்டத்தையும் உடைக்கவில்லை. அவர் 2012 இல் சட்டபூர்வமாகவே ஈக்வடோரிய தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரினார், அப்போது அவர் இட்டுக்கட்டப்பட்ட பாலியல் நடத்தை குற்றச்சாட்டுகளை முகங்கொடுத்திருந்த நிலையில் சுவீடன் அதிகாரிகள் அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க திட்டமிட்டு வந்தனர்.
கட்டப்பஞ்சாயத்து போன்ற நீதிமன்றத்திற்குத் தலைமை தாங்கும் நீதிபதி Emma Arbuthnot, பிற்போக்குத்தனமான பழமைவாத கட்சி அரசியல்வாதி James Arbuthnot இன் மனைவி ஆவார். பிரபுக்கள் சபையில் இடம் பிடிப்பதற்கு முன்னதாக, Baron Arbuthnot பாதுகாப்பு அமைச்சகத்தில் உயர் பதவி வகித்து வந்தார். அவர் பிரிட்டனின் அரசுக்குள் உளவுத்துறையுடனும் மற்றும் ஆயுதத் தொழில்துறையிலும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளார். அவர் மக்களின் பொதுநிதியை தனிப்பட்ட பயன்பாட்டுக்குத் திருப்பியதற்காக உத்தியோகபூர்வமாக கண்டனத்திற்குள்ளானவர். Emma Arbuthnot இன் தனிப்பட்ட தொடர்புகளை வைத்து பார்த்தால், ஜூலியன் அசான்ஜின் கதியைத் தீர்மானிக்கும் அந்த நீதிமன்ற நடைமுறைகளுக்கு தெளிவாக அவர் தலைமை வகித்திருக்கவே கூடாது. ஆனால் தன்னைதானே அவர் மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகளையும் Arbuthnot நிராகரித்து விட்டார்.
நீதிபதி Arbuthnot தலைமையிலான அந்த சட்ட கேலிக்கூத்து எவ்வாறு முடியும் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். அந்த நடைமுறையின் ஒவ்வொரு விபரமும் மிக கவனமாக எழுதப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் Arbuthnot அவர் முடிவை வழங்குகையில், அவர் வழங்க இருக்கும் வரிகள் கூட ஏற்கனவே எழுதப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. அமெரிக்காவிடம் ஜூலியன் அசான்ஜை விசாரணை கைதியாக ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் பெப்ரவரியில் நிறைவடைய உள்ளன, அசான்ஜ் யாரை அம்பலப்படுத்த அதிகளவு செயல்பட்டுள்ளாரோ அங்கே அவர் அதே போர் குற்றவாளிகளின் பிடியில் நிறுத்தப்பட உள்ளார். ஏற்கனவே பதியப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், ஜூலியன் அசான்ஜ் 175 ஆண்டுகால சிறை தண்டனையை முகங்கொடுக்கிறார். அவர் எந்த மாதிரியான கொடூரமான சிறை நிலைமைகளில் அடைக்கப்படுவார் என்று அச்சுறுத்தப்பட்டுள்ளரோ அது "குரூரமான மற்றும் வழமைக்குமாறான தண்டனைக்கு" தடைவிதிக்கும் அமெரிக்க அரசியலமைப்பை ஏளனப்படுத்துவதாக இருக்கும்.
ஜூலியன் அசான்ஜின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அவரது பாதுகாப்பிற்கான ஒரு சர்வதேச பிரச்சாரம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். சிறிதும் தாமதிக்க முடியாது. இன்றிலிருந்து பெப்ரவரிக்கு இடையே என்ன நடக்கிறதோ அதுவே தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும். ஜூலியன் அசான்ஜின் வாழ்வைப் பாதுகாக்க சர்வதேச தொழிலாள வர்க்கம், மாணவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் புத்திஜீவிகளை அணித்திரட்ட ஓர் உலகளாவிய பிரச்சாரத்தை ஒழுங்கமைப்பது அவசியமாகும். ஜூலியன் அசான்ஜிற்காக பரந்தரீதியில், ஆழமாக உணரப்படுகின்ற, ஆனால் இப்போது நிலவுகின்ற மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் உள்ளார்ந்த அனுதாபமும் ஆதரவும், அவரை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான சதியை தோற்கடிக்கவும் மற்றும் அவர் விடுதலையைப் பெறுவதற்கும் போராடுவதற்காக, ஒரு நனவுபூர்வமான அரசியல் இயக்கமாக மாற்றப்பட வேண்டும்.
அசான்ஜ் ஒரு பயங்கர குற்றகரமான சதிக்கு ஆளாகி உள்ளார், இதில், உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அரசுகளும், உளவுத்துறை முகமைகள் மற்றும் அவற்றின் பெருநிறுவன ஊடக ஊதுகுழல்களும் சம்பந்தப்பட்டுள்ளன.
அசான்ஜை அழிப்பதற்கான இத்திட்டத்தின் கேவலமான விபரங்கள் அனைத்தையும், அதாவது பாலியல் நடத்தை குறித்த மோசடி வாதங்களைக் கொண்டு விக்கிலீக்ஸ் ஸ்தாபகரைச் சிக்க வைக்க எவ்வாறு திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தன, எவ்வாறு ஸ்வீடன் வழக்குதொடுனர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை விலைக்கு வாங்கியிருந்தனர், ஸ்டாக்ஹோம், இலண்டன், சிட்னி மற்றும் கீட்டோவின் உளவுத்துறை முகமைகள் எவ்வாறு அவற்றின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தன, அமெரிக்க அரசாங்கம் அசான்ஜைப் துன்புறுத்துவதற்கும் வழக்கில் இழுப்பதற்காகவும் சூத்திரதாரியாக செயற்பட்ட நிலையில், அது எவ்வாறு அதன் கையிலிருப்பிலுள்ள அனைத்து கையூட்டுக்கள் மற்றும் அச்சுறுத்தல்களை பயன்படுத்தியுள்ளது என்பது பற்றிய விபரங்கள் அனைத்தும் சீற்றத்தில் உள்ள பொதுமக்களுக்கு முழுமையாக அறியச் செய்யப்படும் ஒரு நேரம் வரும்.
அசான்ஜை இன்னலுக்கு உட்படுத்துதல் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு பாரிய தாக்குதலுக்குத் தாக்குமுகப்பாக உள்ளது, இது பேச்சு சுதந்திரத்தை அழிப்பது, புலனாய்வு இதழியலைச் சட்டவிரோதமாக்குவது, விமர்சகர்களை பீதியூட்டி பயங்கரமாக காட்டுவது, அரசின் குற்றங்கள் அம்பலப்படுத்தப்படுவதைத் தடுப்பது, சமூக சமத்துவமின்மை மற்றும் போருக்கு பாரிய மக்கள் எதிர்ப்பை ஒடுக்குவதே இதன் நோக்கமாகும்.
ஏற்கனவே அசான்ஜிற்கு எதிரான தேசத்துரோக சட்ட குற்றச்சாட்டுக்கள் வெளியிடப்பட்டமையே, பத்திரிகையாளர்கள் மீதான சர்வதேச தாக்குதல்களுக்கு மடைகளைத் திறந்து விட்டுள்ளது. யேமனில் இனப்படுகொலைப் போரில் அரசு உடந்தையாய் இருந்ததை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் பிரான்சில் வழக்கில் இழுக்கப்பட்டிருப்பது, போர் குற்றங்கள் மற்றும் உளவுபார்ப்பை அம்பலப்படுத்திய கட்டுரைகள் சம்பந்தமாக ஆஸ்திரேலியாவில் பொலிஸ் சோதனைகள் நடத்தப்பட்டிருப்பது ஆகியவை இவற்றில் உள்ளடங்கும்.
அசான்ஜை பாதுகாக்க 16 ஏப்ரல் 2019 இல் இலங்கையில் நடத்தப்பட்ட பேரணி
அமெரிக்காவுக்குள், ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க வரலாற்றிலேயே பேச்சு சுதந்திரம் மீதான மிகக் கடுமையான தாக்குதலாக அரசியலமைப்பின் முதல் சட்டதிருத்தத்தை அழிக்க முயன்று வருகிறது. உலகளவில், அது பத்திரிகையாளர்களையும், பதிப்பகத்தார் மற்றும் ஒவ்வொரு இடத்திலும் உள்ள நடவடிக்கையாளர்களை வழக்கில் இழுக்கும் நிலைமைகளை உருவாக்க முயன்று வருகிறது. இவர்களும், அமெரிக்க அரசின் வெறுப்புக்கு ஆளானால், இதேபோன்ற ஜோடிக்கப்பட்ட அமெரிக்க குற்றச்சாட்டுக்கள் மற்றும் வெளிநாட்டிடம் கைமாற்றப்படுவதை முகங்கொடுப்பார்கள்.
முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக அதிகரித்து வரும் சமூக எதிர்ப்புக்கு, ஆளும் உயரடுக்குகள், பாசிசவாத மற்றும் தீவிர வலதுசாரி இயக்கங்களை ஊக்குவிப்பதன் மூலமாகவும், முன்பில்லாதளவில் கடுமையான பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை பயன்படுத்துவதன் மூலமாகவும், போருக்கான அவற்றின் தயாரிப்புகளைத் தீவிரப்படுத்துவதன் மூலமாகவும் விடையிறுத்து வருகின்றன. அவர்கள் தொழிலாளர்களையும், இளைஞர்கள், கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளை அச்சுறுத்தவும் மற்றும் பாரிய அரசியல் ஒடுக்குமுறைக்கான ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கவும் அசான்ஜை பலிக்கடா ஆக்கி வருகின்றனர்.
ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லா அரசாங்கங்கள், உளவுத்துறை முகமைகள் மற்றும் பெருநிறுவனங்களை விடவும் சர்வதேச தொழிலாள வர்க்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். முதலாளித்துவ வர்க்கம் அசான்ஜை இன்னல்படுத்துவதை சர்வாதிகாரத்திற்கான அதன் திட்டங்களுக்கான அச்சாணியாக பயன்படுத்துவதைப் போலவே, தொழிலாள வர்க்கமும் இராணுவவாதத்திற்கு எதிரான, ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான எல்லா தாக்குதல்களுக்கும் எதிரான ஓர் எதிர்தாக்குதலுக்கு அசான்ஜின் பாதுகாப்பை மையப்புள்ளியாக ஆக்க வேண்டும்.
இந்த போராட்டத்தின் வெற்றிக்கு ஓர் அரசியல் முன்னோக்கு அவசியப்படுகிறது. ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கின் பாதுகாப்பானது, ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கான போராட்டத்தை முதலாளித்துவ சுரண்டல் மற்றும் அரசியல் ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் சமூக போராட்டத்துடன் நனவுபூர்வமாக இணைக்கும் ஓர் உலகளாவிய மூலோபாயத்தால் வழிநடத்தப்பட வேண்டும். அங்கே சர்வதேச வர்க்க போராட்ட பேரலை அதிகரித்து வருகிறது, இது ஜூலியன் விடுதலையை வெற்றிகொள்வதற்கான போராட்டத்திற்கு சக்தி வாய்ந்த பாரிய அடித்தளத்தை வழங்குகிறது. ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங் அதைப்போல் உலகெங்கிலும் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சக சகோதர சகோதரிகளைப் போலவே இறுதி ஆய்வுகளில் அவர்கள் வர்க்க போர் கைதிகளாவர்.
அமெரிக்கா மற்றும் போலாந்தில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம், மெக்சிகோவில் மக்கில்லாடோராவில் தன்னிச்சையான நடவடிக்கைகள், இந்தியாவில் பொது வேலைநிறுத்தம், அல்ஜீரியா, சிம்பாப்வே மற்றும் சூடானில் பாரிய இயக்கம், பிரான்சில் ஒடுக்கவியலாத மஞ்சள் சீருடை போராட்டங்கள், மிக சமீபத்தில், ஹாங்காங்கில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்கள் என அதிகரித்து வரும் உலகந்தழுவிய வேலைநிறுத்த இயக்கமானது, பொது மக்கள் அவர்களின் அடிப்படை உள்நாட்டு சுதந்திரங்கள் மற்றும் சமூக உரிமைகளுக்காக போராட தீர்மானகரமாக இருக்கிறார்கள் என்பதற்கு சான்று பகிர்கின்றன. இத்தகைய போராட்டங்கள் ஒவ்வொரு நாட்டிலும் பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களை பீதியூட்டி உள்ளன.
ஜூலியன் அசான்ஜின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான இயக்கம் அடிமட்டத்திலிருந்து வர வேண்டும். அவரை வழக்கில் இழுத்து இன்னலுக்கு உள்ளாக்கி வரும் அரசாங்கங்களிடமே தார்மீகரீதியில் முறையிடுவது பயனற்றது என்பதை விடவும் மோசமானதாகும். அசான்ஜின் விடுதலைக்கு, ஆளும் வர்க்கத்தின் அரசியல் முகவர்களிடம் இருந்தும், எதிர்கட்சிகளிடம் இருந்தும், சுயாதீனமாக போராட வேண்டும். சமூக யதார்த்தத்தை சரியாக மதிப்பீடுசெய்வதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு மூலோபாயத்தால் வழிநடத்தப்படும் போது, இந்த போராட்டம் ஜெயிக்க முடியும். ஆளும் உயரடுக்குகளின் ஈவிரக்கமற்றத்தன்மையைக் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்றாலும், அவர்கள் எல்லாம்வல்ல ஆற்றலுடையவர்கள் கிடையாது. அனைத்து உணர்வுகளிலும் தன்னைத்தானே மிகவும் முடக்கக்கூடிய அவநம்பிக்கைவாதம் (Pessimism), இந்த போராட்டத்திற்கு எந்த பங்களிப்பும் செய்யாது, மாறாக அழிவையே விளைவிக்கும். என்ன அடையப்படும் என்பது போராட்டத்திலேயே தீர்மானிக்கப்படும்.
இந்த போராட்டத்தை ஒரு புதிய மற்றும் உயர்ந்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்ல, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் குரலான உலக சோசலிச வலைத் தளமும் ICFI உடன் இணைந்துள்ள உலகெங்கிலும் உள்ள கட்சிகளும் ஓர் உலகளாவிய பாதுகாப்பு குழுவை உருவாக்க அழைப்பு விடுக்கின்றன. ஜூலியன் அசான்ஜை இன்னல்படுத்துவதை முடிவுக்குக் கொண்டு வரவும் மற்றும் அவரின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் சர்வதேச போராட்டத்தை ஒழுங்கமைத்து ஒருங்கிணைப்பதே இந்த குழுவின் நோக்கமாக இருக்கும். போராடுவதற்கான விருப்பம் பாரிய நடவடிக்கையாக மாற்றப்பட வேண்டும். இந்த அறிக்கையின் நோக்கம் உலகளாவிய பாதுகாப்பு குழுவை உருவாக்குவதற்காக பணியாற்றத் தொடங்குவதும் மற்றும் சர்வதேச நடவடிக்கைக்கான ஒரு வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதுமாகும்.
ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்புக்கு கோட்பாட்டுரீதியில் பொறுப்பேற்கும் அடிப்படையில், இந்த வரலாற்று போராட்டத்தில் முற்போக்கான, சோசலிச மற்றும் இடதுசாரி தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் ஒத்துழைப்பைக் கோருகிறோம். இந்த குழுவில் இணைபவர்கள் உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) முன்னெடுக்கும் அரசியல் கண்ணோட்டங்கள் மற்றும் வேலைதிட்டங்களின் அனைத்து அம்சங்களுடனும் உடன்பட வேண்டும் என்பது அவசியமும் இல்லை அல்லது நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. இந்த முக்கிய பாதுகாப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களிடையே —கண்டிப்பாக அரசியல் வலது நிலைப்பாடு கொண்டவர்களைத் தவிர— பரந்த பலதரப்பட்ட நிலைப்பாடுகள் இருக்கலாம். இக்குழுவில் இணைபவர்கள் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கு நிபந்தனையின்றி பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்பதையும், ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கின் விடுதலை ஒரு பாரிய மக்கள் இயக்கத்தைச் சார்ந்திருக்கிறது என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் மட்டுமே நாங்கள் கோருகிறோம்.
ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கு தீவிரமாக பொறுப்பேற்றுள்ள எவரும் இப்போராட்டத்திலிருந்து ஒதுங்கி நிற்க முடியாது. பேச்சு சுதந்திரம் மற்றும் உண்மையை பாதுகாப்பதிலும், உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை தீங்குகளான சுரண்டல், சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிராக போராடுவதிலும் ஜூலியன் அசான்ஜின் வழக்கு இருபத்தோராம் நூற்றாண்டின் ஒரு முக்கியமான போர்க்களமாகும்.
இப்போதே ஜூலியன் அசான்ஜைப் பாதுகாக்கும் போராட்டத்தில் இணைய பதிவு செய்யுங்கள்!
0 comments :
Post a Comment