Friday, June 7, 2019

அமைச்சரவையை அவசரமாகக் கூட்டி சீறிப்பாய்ந்த மைத்திரியுடன் முரண்டு பிடித்தார் ரணில் விக்கிரமசிங்கே.

இன்று பிற்பகல் ஏழுமணிக்கு அவசரமாக அமைச்சரவையை கூட்டிய சிறிசேனா அங்கு மிகவும் சீறிப்பாய்ந்துள்ளார். விசேடமாக அமைச்சரவை சந்திப்புக்கு இன்று சபாநாயகருக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி ஈஸ்டர் தினமன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் தனது மிகுந்த எதிர்ப்பையும் விசனத்தையும் தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைக்குழுவின் நடவடிக்கைகள் ஊடாக தேசிய பாதுகாப்புக்கு பலத்த பின்னடைவும் அபகீர்த்தியும் ஏற்பட்டுள்ளதாக கடிந்த அவர் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு வேண்டியுள்ளார். இருந்தபோதும் அமைச்சரவையில் மைத்திரியை எதிர்த்து பல அமைச்சர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இனி வரமாட்டார்கள் என அறிவித்த மைத்திரி, பாதுகாப்பு அதிகாரிகள் எவரையும் இனித் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டாம் எனத் தான் உத்தரவிட்டிருப்பதாகவும் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தெரிவுக்குழு விசாரணை வேண்டாம் என சபாநாயருக்குத் தான் முன்னரே அறிவித்திருந்த போதிலும் அவர் சபைக்கு அறிவிக்கவில்லை எனக் கடும் சீற்றத்துடன் தெரிவித்த ஜனாதிபதி, சேவையில் இருந்து விலக்கப்பட்ட அதிகாரிகளே தெரிவுக்குழு முன் சாட்சியமளித்தனர் எனவும், பதவியில் இருக்கும் எவரும் இனி சாட்சியமளிக்கமாட்டார்கள் எனவும் குறிப்பிடுள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு சாட்சியங்கள் மூலம் பாதுகாப்புத் தரப்பின் தகவல்கள், புலனாய்வுத் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும் அதேசமயம் தவறுகளைத் தன் மீது சுமத்த சிலர் முயல்வதாகவும் ஜனாதிபதி சாடியுள்ளார்.

கூட்டத்தில் ஜனாதிபதியின் கருத்துக்களினால் ஆத்திரமடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர்கள் பலரும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் இடம்பெறும் தெரிவுக்குழு விசாரணையை இடைநிறுத்த முடியாது எனவும், தாக்குதலின் பின்னணி மற்றும் குற்றவாளிகளைக் கண்டறிய தெரிவுக்குழு விசாரணையே சிறந்தது எனவும் வாதிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com