Monday, June 10, 2019

கோத்தபாய மவுண்ட எலிசபத் வைத்தியசாலையில்! வழக்கு விசாரணையில் சிக்கல்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிங்கபூர் மவுண்ட் எலிசபத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. உடல்பரிசோதனை ஒன்றுக்காக நீதிமன்ற அனுமதியுடன் சென்ற அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் இருதயக்கோளாறு ஒன்று சம்பந்தமாக எச்சரித்ததுடன் அதற்கான அறுவைச் சிகிச்சையும் மேற்கொண்டதாக தெரியவருகின்றது.

மே 24 லிலிருந்து ஜூன் 2 வரை நீதிமன்று வைத்திய பரிசோதனைக்காக அனுமதி வழங்கியிந்தது. இந்நிலையில் கோட்டபாயவினால் குறித்த தினங்களுக்குள் மன்றில் ஆஜராக முடியாதுபோனது என்றும் அவருக்கு மேலதிக சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும் அவரது சட்டத்தரணி அலி சப்றி மன்றுக்கு அறிவித்துள்ளார்.

தனது கட்சிக்காரர் மன்றில் ஆஜராகவேண்டிய கால அவகாசத்தை நீடிக்குமாறும், அவர் மன்றில் ஆஜராகும்வரை வழக்கு விசாரணைகளை நிறுத்திவைக்குமாறும் சட்டத்தரணி மன்றிடம் கோரியுள்ளார். சட்டத்தரணியின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட விசேட நீதிமன்று ஜூன் 19ம் திகதி வரை அவர் மன்றில் ஆஜராகலாம் என கால அவகாசம் கொடுத்ததுடன் விசாரணைகளை அவர் இன்றி மேற்கொள்ள முடியாது என்ற கோரிக்கைக்கு பதில் கொடுக்கவில்லை என அறிய முடிகின்றது.

விசாரணைகளை துரித கதியில் மேற்கொள்வதற்கென அமைக்கப்பட்ட குறித்த விசேட நீதிமன்று கோத்தபாய இல்லாத நிலையில் விசாரணைகளை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் குறித்த விசாரணைகளை தாமதப்படுத்தும் நோக்கிலேயே கோத்தபாய சிங்கபூர் மவுண்ட எலிசபத் வைத்தியசாலையில் தங்கியுள்ளதாக எதிராளிகள் குற்றஞ் சுமத்துகின்றனர். மறுபுறத்தில் குறித்த விசாரணைகளை துரித கதியில் மேற்கொண்டு கோத்தபாய ராஜபக்சவை சிறையில் அடைக்க ஐக்கிய தேசியக் கட்சி முழு முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கோத்தபாயவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள கோத்தபாய ராஜபக்சவை தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்கு எதிராளிகள் இரு உபாயங்களை வைத்துள்ளனர். ஒன்று அமெரிக்க பிரஜா உரிமையை அமெரிக்காவில் வழக்கினை பதிவு செய்து தாமதப்படுத்தல். இரண்டாவது இலங்கையிலுள்ள வழக்குகளை துரிதப்படுத்தி சிறையிலடைத்தல்.

இவ்விரு விடயங்களையும் கோத்தபாய பெரும் சட்டதரணிகள் குழாம் ஒன்றை வைத்து கையாண்டு வருகின்றார். இலங்கையில் கைது செய்வதை தடுக்கும் முறையில் மன்றில் விண்ணப்பித்து அதற்கான உத்தரவை அவர் பெற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் விசாரணைகள் தாமதமாவதற்கான அனைத்து உபாயங்களையும் அவர் மேற்கொண்டுவருவதாக அறிய முடிகின்றது.

மறுபுறத்தில் அமெரிக்க விடயத்திலும் சட்டத்தரணிகள் ஊடாகவே அவர் கருமங்களை அணுகுவதாக அறியமுடிகின்றது.

No comments:

Post a Comment