Monday, June 17, 2019

கம்பரெலியவும் த.தே.கூ மற்றும் அரச ஊழியர்களின் கூட்டுக்கொள்ளையும்..

எமக்கு அபிவிருத்தி வேண்டாம் அரசியல் தீர்வே வேண்டும் என கடந்த 5 தலைமுறைகளின் அபிவிருத்திக்கு தடையாக நின்றவர்கள் தமிழ் அரசியல்வாதிகள். நாங்கள் அபிவிருத்திக்காக , வேலைவாய்ப்புக்களுக்காக அரசிடம் சென்றால் அரசியல்தீர்வு கேட்கமுடியாதவர்களாக செயலிழக்கச் செய்யப்படுவோம், எமது அரசியல் கோரிக்கை வலுவற்றதாக மாறிவிடும் என்று எத்தனையோ அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை தட்டிவிட்ட எமது தலைமைகள் தற்போது கம்பரெலியவை தலையில் சுமந்து காடு நாடு எங்கும் செல்கின்றனர்.

கம்பரெலிய போன்றதோர் அபிவிருத்தி திட்டத்தில் காலம்கடந்தேனும் கலந்து கொண்டதில் நாம் தொடர்ந்தும் இழப்பதிலிருந்தம் எம்மை பாதுகாத்துக்கொள்கின்றோம் என்று திருப்தியடையலாம். ஆனாலும் கடந்த காலத்தில் இவ்வாறு முன்வைக்கப்பட்ட திட்டங்களில் இணைந்து கொள்ளாமைக்கும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பரெலியவில் இணைந்து கொண்டமைக்குமான காரணம் மக்கள் மன்றில் வினவப்படவேண்டியதாகும்.

கம்பரெலிய செயற்திட்டங்களின் ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோக பற்றற்ற முகவர்களாக செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசின் நேரடி முகவர்களான அரச ஊழியர்களுகுமிடையே முரண்பாடுகள் தோன்றியுள்ளால் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

அரசியல் கட்சிகளின் எடுபிடிகளான பொதுநிர்வாக சேவையிலுள்ள ஊழியர்கள் தத்தமது எஜமானர்களுக்கு விசுவாசமாக செயற்பட முற்படுகின்றபோது நடவடிக்கைகளை செயற்படுத்துவதில் இழுபறிகள் ஏற்பட்டு விடயங்களில் காலதாமதங்களும் சிக்கலுக்களும் தோன்றியுள்ளன. இதேநேரத்தில் மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டியர்களும் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறுபவர்களுமான பொது நிர்வாக ஊழியர்கள் அபிவிருத்தி பணிகளை தமது சொந்த தேவைகளுக்காக பெரிதும் பயன்படுத்தி வருகின்றமை அவதானிக்க முடிகின்றது.

அபிவிருத்தித்திட்டங்களை தெரிந்தெடுக்கின்றபோது அரசியல்வாதிகளும் அரச ஊழியர்களும் தரகுக்கூலிக்காக அலைவதுடன் திட்டங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் சென்றடையவேண்டும் என்பதில் குறியாகவுள்ளனர்.

அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் தமது வாக்குவங்கியையும் சட்டைப்பையையும் கவனத்தில் கொள்வதுடன் அரச உத்தியோகித்தர்கள் தமது சொந்தபந்தங்களையும் சட்டைப்பையையும் கவனத்தில் கொள்கின்றனர். பிரமுகர் அரிப்பெடுத்து அலைந்துதிரியும் அரசியல்வாதிகள் அரசபணத்தில் மாலைவாங்கி தங்களுக்கே சூடிக்கொள்ளுகின்ற சம்பவங்களும் நடைபெறுகின்றது. இன்று அரச உழியர்கள் மக்களுக்கு சேவையாற்றவேண்டிய நேரங்களில் பெரும்பாலான நேரங்களில் கௌரவ விருந்தினர்களாகவே வலம்வருகின்றனர்.

மட்டக்களப்பின் மாவட்ட செயலராக உள்ளவர் ஓய்வு பெற்றபின் அரசியலில் நுழையும் நோக்கில் தனது அரச கதிரையை பயன்படுத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. அதன் நிமிர்த்தம் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுவதாகவும் பிரதியுபகாரமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ரிக்கட் ஒன்றை எதிர்பார்ப்பதாகவும் அறியமுடிகின்றது. காலம் கனிந்துவரும்போது இவ்விடயம் தொடர்பாக அம்பலப்படுத்த இலங்கைநெட் ஆவலுடன் காத்திருக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com