Friday, June 7, 2019

நாட்டின் பாதுகாப்பு அந்தரத்தில்! அடுத்த தேர்தலில் கூட்டு சேர்வது தொடர்பில் அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தையில்.

இலங்கையின் பாதுகாப்பு தொடர்பாகவும் பொருளாதார வீழ்ச்சி தொடர்பாகவும் நாட்டு மக்கள் பெருதும் அச்சமுற்றுள்ள இச்சந்தர்ப்பத்தில், எதிர்வரும் தேர்தல்களில் ஆசனங்களை எவ்வாறு கைப்பற்றுவது என்றும் அதற்கான கூட்டணிகளை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்றும் அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில் இன்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹந்த ராஜபக்சவின் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளனர்.
அதன்படி அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 17ம் திகதி இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர் தமது கூட்டணியை பலப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் மறுபுறத்தில் வடகிழக்கினை தளமாக கொண்டுள்ள தமிழரசுக் கட்சியை பிரதானமாகக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமது கூட்டணியினை பலப்படுத்துவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சு நடாத்தி வருகின்றனர்.

மேலும் முஸ்லிம் வாக்குகளை இலக்குவைத்து முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு ஒன்று தொடர்பான பேச்சுவார்த்தைகள் மிக இரகசியமாக இடம்பெற்று வந்தபோதும், அடிப்படைவாதத்திற்கு எதிரான கருத்துக்கள் பலமாக எழுந்துள்ள நிலையில் தேசிய கட்சிகளுடன் இணைந்திருப்பதே முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பு என்ற அடிப்படையில் அம்முயற்சி தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com