தோணாவில் வீசப்படும் கழிவுகளால் நோய் பரவும் அபாயம். அரச ஊழியர்கள் அசமந்தப்போக்குடன்!
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாளிகா வீதியில் உள்ள தோணாவில் பிரதேச மக்கள் வீசும் திண்மக்கழிவுகளால் குறித்த பகுதியில் வாழும் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் தினமும் இரவு நேரங்களில் குறித்த தோணாவில் தமது அன்றாட குப்பைகளை வீசுவதனால் பாரிய துர்நாற்றம் வீசுவதுடன் , கட்டாக்காலி நாய்களின் தொல்லையும் அதிகரித்து காணப்படுவதாகவும் அப்பிரதேச சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பல நோய்களுக்கு ஆளாவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்தும் முறையான வேலைத்திட்டங்கள் இல்லாமையால் பல தசாப்தங்களாக மக்கள் தொடர்ந்தும் பாரிய இன்னல்களை அனுபவித்துவருவதாகவும் இது தொடர்பில் சம்மந்தப்பட்டோர் பாராமுகமாக இருப்பதாகவும் அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
குறித்த தோணா பகுதிக்கு அண்மையில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலை, சுகாதார மத்திய நிலையம், பிரபல உணவகங்கள், மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் உள்ளதால் கல்முனை மாநகர சபை, சுகாதார பிரிவு போன்றன இது விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வினை பெற்றுத்தர முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 comments :
Post a Comment