Saturday, June 29, 2019

இராணுவ தலைமைப் பொறுப்புக்களில் திடீர் மாற்றம். யாழ் மற்றும் வன்னி தளபதிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரது பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில், இராணுவ செயலகம், புதிய நியமனங்களை அறிவித்துள்ளது.

இதன்படி, மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, இராணுவ தொண்டர் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் வகித்து வந்த, மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைத் தளபதி பதவியிலும் அவர் தொடருவார்.

எனினும், மேற்கு படைகளின் தலைமையக தளபதி பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ். படைகளின் தலைமையக தளபதியாக இருக்கும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி, அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஜூலை 17ஆம் நாள் தொடக்கம், பாதுகாப்பு அமைச்சில், மத தீவிரவாதம், வன்முறை அடிப்படைவாதம், மற்றும் தீவிரவாதத்தை தடுக்கும் மற்றும் முறியடிக்கும் தேசிய திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய இராணுவ பிரதி தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் குமுது பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வன்னி படைகளின் தலைமையக தளபதி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

59 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, யாழ். படைகளின் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத் தலைமையகத்தில் ஆயுத தளபாடப் பிரிவின் மாஸ்டர் ஜெனரலாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் குணவர்த்தன அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, வன்னிப் படைகளின் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

24 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருக்கும் மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே, அந்தப் பதவியில் இருந்து, மாற்றப்பட்டு, மேற்கு படைகளின் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதன்மை கள பொறியாளராக இருந்த மேஜர் ஜெனரல் ஆர்கேபி பீரிஸ், இராணுவ தலைமையக ஆயுத தளபாடப் பிரிவின் மாஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

11 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய, மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணயக்கார, இராணுவத் தலைமையகத்தின் முதன்மை கள பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

54 ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சேனாரத் பண்டார, 11 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

அதேவேளை, 14 பிரிகேடியர்களின் பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com