Monday, June 3, 2019

பசில் ராஜபக்சவின் திவிநெகும வை ரணில் கம்பரெலிய வாக திணிக்க அதை நடைமுறைப்படுத்தும். த.தே.கூ !

படிப்பது சிவபுராணம்: இடிப்பது சிவன் கோவில்' என்பது தான் பல அரசியல்வாதிகளினதும் அரசியல் கட்சிகளினதும் போக்கு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்கின்ற காரியங்களைப் பார்க்கும்போது இந்தப் பேச்சு மொழி தான் நினைவுக்கு வருகின்றது.

மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பினதும் ஈழத் தமிழர்களினதும் நிலைப் பாடு. பேச்சுக்குப் பேச்சு, மூச்சுக்கு மூச்சு இதைத்தான் கூட்டமைப்பு வலியுறுத்தி வந்தது. ஆனால் தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இதன் படி ஒழுகுகின்றார்களா?

மாகாணங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை மேலும் வெட்டிக் குறைத்து, அவற்றை மத்திய அரசு பிடுங்குவதற்காக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் திவிநெகும என்ற பெயரில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டமை பலருக்கும் நினைவிருக்கலாம். இதற்கு எதிராகக் கூட்டமைப்பினர் உயர்நீதிமன்றுக்குச் சென்றனர். மாகாண சபைகளின் - குறிப்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணா சபையின் -அனுமதியோ, இலாக்கமோ இன்றி இப்படி மாகாணங்களுக்கு 13ஆவது அரசமைப்புத் திருத்தம் மூலம் வழங்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கலை மத்திய அரசு திரும்பப் பிடுங்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் கூட்டமைப்பு வாதிட்டது. கூட்டமைப்பு சார்பில் மாவை சேனாதிராசா எம்.பியே இந்த வழக்கைத் தொடுத்தார். சுமந்திரன் எம். பியும் தமிழர் தரப்பு வாதத்தைமுன்வைத்தார்.

அந்த வாதத்துக்குச் சார்பாகத் தீர்ப்பளித்தமை காரணமாகமாகவே அப்போது உயர்நீதிமன்றில் பிரதம நீதியரசராக இருந்து அந்தத்தீர்ப்பை வழங்கிய நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஒரேநாளில் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து பலவந்தமாகக் கலைக்கப்பட்டார்.

இப்படி எல்லாம் மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிரும்படி வற்புறுத்தி நின்ற தமிழ்க் கூட்டமைப்பு இன்று என்ன செய்கின்றது?

'கம்பெரலிய', 'பனை நிதியம்' எல்லாம் எத்தகையவை?

மத்திய அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு தாங்கள் பெயருக்கு 'இடைத்தரகர்களாக' இருந்துகொண்டு அவற்றுக்கு முண்டுகொடுக்கும் வேலையைத்தான் அவர்கள் செய்கின்றார்கள்.

இந்த இரு வழிவகைகள் ஊடான - கம்பெரலிய மற்றும் பனைநிதியம் ஆகியன மூலமான - திட்டங்களை செயற் படுத்தும் உள்ளூர் முகவர்கள் யார்? மத்திய அரசின் கீழ் நேரடியாகஇயங்கும் பிரதேச செயலகங்கள்தான்.உண்மையில் இந்த நிதியும், திட்டங்களும் மாகாணசபையின் கட்டமைப்புக்கள் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டியவை.

இன்று வேண்டுமானால் வடக்கு மாகாணசபை ஜனாபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் கைகளில் இருக்கலாம்.ஆனால், அதுதான் அதிகாரப் பரவலாக்கல் அலகு. அதன் ஊடாகத்தான்இந்த இரு கட்டமைப்புகளின் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதே முறை.

அப்படி இல்லாமல், அத்தகைய நடவடிக்கையை மஹிந்தரின் முன்னைய அரசு முன்னெடுத்த போது நாம் அதை முழுமையாக எதிர்த்தோம். ஆனால், அதையே இப்போது நமது எம்.பிக்கள் முன்னின்று ஆரவாரமாகச் செய்கின்றார்கள். மஹிந்தரின் அரசு அப்போது அப்படி முன்னெடுத்தமையிலாவது ஒரு. நியாயம் இருந்ததாகக் கூறலாம். அது, முப்பது ஆண்டுகால யுத்தம் முடிவுக்கு வந்த நேரம். வடக்கு. கிழக்கில் மீள் கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வுப் பணிகளைத் தேசிய ரீதியில் ஒன்றினைத்து முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு இலங்கை அரசின் முன்னால் இருந்த வேளை அது.

அந்த வேளையில் மாகாணத்துக்குரிய அதிகாரங்களை மத்திய அரசு கையில் எடுத்து சில திட்டங்களை ஒன்றிணைத்து முன்நகர்த்த முயன்றது என்ற சாக்கிலாவது அந்த நடவடிக்கைய நியாயப்படுத்தலாம்.

அப்போது வடக்கு மாகா சபைக்கான தேர்தல் கூட நடக்காத காலம். இப்போது அப்படியல்ல. யுத்தம் முடிவடைந்து பத்தாண்டுகள் கடந்து விட்டது. மாகாணங்களில் மாகாண? நிர்வாகங்கள் அமைந்து விட்டன. வடக்கு மாகாண சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஒரு பதவிக்காலம் கூட முடிவடைந்து விட்டது.

இப்போது ஒதுக்கப்படுகின்ற மாகாண அபிவிருத்திக்கான நிதி உண்மையில் மாகாணா சபைகளுக்குத்தான் வரவேண்டும். ஆனால், இன்று கூட்டமைப்பு எம். பிக்கள் தலையில் வைத்துக் கூத்தாடும். கம்பெரலிய, பனை நிதியம் போன்றன நேரடியாக மத்திய அரசினால் முன்னெடுக்கப்படுபவை. அவற்றில் ஒரெயொரு அனுகூலம் இந்த விவகாரங்களில் கூட்டமைப்பின் எம்.பிக்கள் இப்போது இடைத் தரகர்கள் போல செயற்படலாம் செயற்படுகின்றனர். அவ்வளவே.

அதுவும்கூட அவர்கள் காபந்து பண்ணும் ரணில் அரசு ஆட்சியிலிருக்கும் வரைதான். அது கவிழ்ந்ததும், இடைத்தரகர்கள் சிறப்புரிமையும் 'அவுட் ஆகிவிடும்.

அதற்குப் பிறகு அப்போது மத்திய அரசில் இந்த விடயத்துக்குப் பொறுப்பாக இருக்கும் ஒருவரும் - முன்னர் அந்தப் பொறுப்பில் இருந்த பஸில் ராஜபக்ஷ போன்ற ஒருவரும்-அவரின் செம்பு தூக்கிகளும்தான் பழையபடி இந்த விடயங்களைக் கையாளுவர். அப்போது வெளியில் வந்து நின்று கொண்டு அதிகாரப்பரவலாக்கல் என்று கூக்குரல் இடுவார்கள் இந்த எம். பிக்கள்.அதிலும் பார்க்க இப்போதே நேர்சீராகச் சென்றால் என்ன, கம்பெரலிய, பனை நிதியம் போன்றவற்றைத் தற்போதைய ரணில் அரசு மீது தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப்பயன்படுத்தி மாகாணசபை ஊடாக முன்னெடுத்தால் என்ன?

அதில் ஒரேயொரு பின்னடைவு இருக்கும். இந்தவிடயங்களில் நம் எம்.பிக்களின் இடைத்தரகர் நிலைமைக்கு சற்றுப் பங்கம்வந்துவிரும். அவ்வளவு தான்.'இடைத்தரகர்' பவிசா? அல்லது உண்மையான அதிகாரப்பகிர்வா? எது வேண்டும்? எம்.பிக்களே முடிவு செய்யட்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com