அடுத்த தேர்தலில் கோத்தாவே வேட்பாளர்! அடித்துக்கூறுகின்றார் கம்பன்பில
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையே வேட்பாளராக களமிறக்குவோம் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.
மேலும் ஒகஸ்ட் 11ஆம் திகதி இதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என்றும் இதில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை அவசரகாலச்சட்டம் தளர்த்தப்படுமாக இருந்தால், நாட்டின் பாதுகாப்பு நிலைமை மேலும் பலவீனமடையும். என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து இரண்டு மாதங்கள் கடந்தும் இவ்வாறான தாக்குதல்கள் இனியும் இடம்பெறாமல் இருக்க அரசாங்கத்தினால் எந்தவொரு ஸ்திரமான நடவடிக்கையும் எடுக்க முடியாதமையையிட்டு நாம் கவலையடைகிறோம்.
பயங்கரவாத அமைப்புக்களுக்கான தடை மற்றும் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளுக்கானத் தடை என்பனகூட, அவசரகாலச் சட்டத்தின் கீழ்தான் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த மாதமே நாட்டின் பாதுகாப்பு நிலைமை சீராகிவிட்டது எனக் குறிப்பிட்டு அவசரகாலச் சட்டம் தளர்த்தப்படுமாக இருந்தால், தற்போது பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புக்கள் அனைத்தும் சாதாரண அமைப்புக்களாகிவிடும்.
இதனால், கைது செய்யப்பட்டுள்ளவர்களையும் விடுதலை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். அதேபோல், குறித்த ஆடைகளுக்கானத் தடையும் இல்லாது போய்விடும்.
இந்த விடயம் குறித்து இரண்டு அரசியல் தரப்பும் சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதுதான் எமது வேண்டுகோளாக இருக்கிறது.
அரசியல் வேறுபாடுகளை மறந்து நாட்டின் பாதுகாப்புக்காகவும் எதிர்க்கால சந்ததியினரின் நன்மைக்காகவும் ஒன்றிணைந்து முடிவுகளை எடுக்க வேண்டும்.
மத்ரசா பாடசாலைகள் தொடர்பிலும் இன்று பல கேள்விகள் எழுந்துள்ளன. இவை தொடர்பாகவும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறான நிலைமைகளினால் நாடு இன்னும் அபாயமான நிலைமையில் பயணித்துக்கொண்டிருக்கிறது என்றே தெரிகிறது.
அடிப்படைவாதிகளின் பணம், அவர்களின் வாக்குகளுக்கு அடிப்பணிந்துதான் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதின் குற்றவாளி என நாம் பல்வேறு ஆதாரங்களை முன்வைத்துள்ளோம். ஆனால், அவரிடம் இரண்டு மாதங்கள் கடந்தும் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை.
எனினும், இவர் மீண்டும் அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டால், நாம் நிச்சயமாக அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவோம். ஜனாதிபதி இந்த விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். உண்மையில், இந்த அரசாங்கம் தற்போது இந்த நாட்டுக்கே சாபமாகத்தான் இருந்து வருகிறது.
இதனால், நாம் நிச்சயமாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவைதான் வேட்பாளராக களமிறக்குவோம்.
ஒகஸ்ட் 11ஆம் திகதி இதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்போம். இதில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்பதையும் நாம் இங்குக் கூறிக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment