Thursday, June 20, 2019

தமிழ் பிரதேச செயலகமாக தரமுயர்த்தவே கூடாது! முஸ்லிம்கள் சத்தியாக்கிரகப்போராட்டம்.

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி இன்று நான்காவது நாளாக கல்முனையில் கல்முனை விகாராதிபதி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து முஸ்லிம்கள் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை 9.00 மணியளவில் கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்சத்தியாக்கிரக போராட்டதினை கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனம், வர்த்தக சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளன.

கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர், ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.ரஸ்ஸாக் உட்பட கல்முனை மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் பலரும் உலமாக்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

'கல்முனையில் இனத்துவ மற்றும் நிலத்தொடர்பற்ற ரீதியில் உருவாக்க எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை' என்பதே அவர்களது பிரதான கோஷமாக உள்ளது.

அங்கு ஊடகங்களுக்கு கருத்துரைத்த மாநகர சபை முதல்வர் றக்கீப்:

இனத்துவ ரீதியிலும் நிலத் தொடர்பற்ற ரீதியிலும் உருவாக்கப்பட எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்ய வேண்டும் எனவும் கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை நியாயமற்றது எனவும் தெரிவித்ததுடன் கல்முனைப் பிரதேசம் ஒரு நியாயமற்ற காரணத்தினால் பிரிக்கப்பட்டு விடக்கூடாது என்ற காரணத்துக்காக சத்தியகிரகப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் - என்றார்.

எல்லைகள் நிர்ணயிக்கப்படாமல், அதற்கான குழுக்கள் நியமிக்கப்படாமல் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தரக்கோருவது ஒரு நியாயமற்ற கோரிக்கையாகும். இதன் மூலம் அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடிய, இன முறுகலை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் நடந்தேற வாய்ப்புக்கள் இருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.








0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com