Thursday, June 27, 2019

அரசியல் பழிவாங்கலுக்குட்பட்ட அரச ஊழியர்களுக்கு வரிப்பணத்தில் நஷ்ட ஈடாம்! மக்களுக்கு ?

2005 முதல் 2015 கால பகுதியில் அரசியல் பழி வாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்ட அரச ஊழியர்கள் 36,000 பேருக்கு வருகின்ற மாதங்களில் நஷ்ட ஈடு வழங்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளதுடன் அதற்கான அமைச்சரவை பத்திரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

இலங்கை பொது நிர்வாக சேவை, முப்படைகள் மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பன அரசியல் வாதிகளின் கைக்கூலிகளாகவே செயற்படுகின்றனர். இவர்களை கோடாரிக்காம்புக்கள், எச்சில்முள் தின்னிகள் மற்றும் அழுக்கெடுப்போர் என்றால் மிகையாகாது. மேற்படி எச்சில்முள் தின்னிகளில் ஒருபகுதியினர் நடைமுறையிலிருக்கும் அரசிற்கு சேவகம் செய்வதற்காக நாட்டின் சட்ட திட்டங்களை தயவு தாட்சணியம் இன்றி மீறுவர். அரச யத்திரம் என்ற புள்டோசரின் சாரதிகளான கோடாரிக்காம்புகள் தங்களது குறுகிய லாபங்களுகாக மக்கள் மீது அரசயந்திரத்தை தயவுதாட்சணியம் இன்றி செலுத்துவர். அவ்வாறு செலுத்துகின்றபோது சக கோடாரிக்காம்புகளும் சில சமயங்களில் அசௌகரியங்களை சந்திக்கின்றன.

அவ்வாறு அசௌகரியங்களை சந்திக்கின்ற கோடாரிக்காம்புகள் அடுத்த அரசு பதவி ஏற்கும்வரை காத்திருந்து தங்கள் மீது புள்டோசர் செலுத்தியோரை பழிவாங்கும். இவ்வாறு மக்களின் பணத்தில் கூலிபெறும் கூலியாட்கள் மாறி மாறி பழிவாங்குவர். இந்த எச்சில்முள்ளுக்கான மல்லுக்கட்டலினுள் சிக்கி பாமர மக்கள் தவிப்பர். அவ்வாறு தவிக்கும் மக்களுக்கு எந்த அரசாங்கமும் நியாயத்தை பெற்றுக்கொடுக்க முறையானதோர் பொறிமுறையை அமைக்கவில்லை. இலங்கையில் பொது நிர்வாக சேவை மக்களை அடிமைகளாகவே நடாத்துகின்றது.

இந்நிலையில் எச்சில்முள் தின்பதில் ஏற்பட்ட பிணக்குகளால் ஏவல்நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களாம் என மக்களின் வரிப்பணத்தில் நஷ்ட ஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுள்ளார் ரணில் விக்கிரமசிங்கே. ஆனால் இந்த எச்சில்முள் போட்டியினுள் சிக்குண்டு பாதிப்புக்களை சந்தித்த மக்கள் தொடர்பாக விக்கிரமசிங்கேயிற்கு எந்தவொரு அக்கறையும் ஏற்படவில்லை.

இங்கே வழங்கப்படும் நஷ்ட ஈட்டு பணம் யாருடை பணம் என்பதை மக்களும் கேள்விக்குட்படுத்துவதில்லை. அரச ஊழியர்கள் பழிவாங்கப்பட்டிருக்கின்றார்கள் என்றால் அவர்கள் யாரால் பழிவாங்கப்பட்டார்கள், சக அரச ஊழியர்களால் பழிவாங்கப்பட்டோருக்கு மக்களின் பணத்தில் நிவாரணம் கொடுக்கும் அநீதியற்றதும் வெட்டமற்றதுமானதோர் நடைமுறை இங்கு இடம்பெறுகின்றது. உண்மையில் அநீதி இழைக்கப்பட்டிருப்பின் பழிவாங்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து நஷ்ட ஈட்டை பெற்றுக்கொடுப்பதற்கு பதிலாக மக்களின் பணத்தில் நஷ்ட ஈடு கொடுப்பது நிறுத்தப்படவேண்டும்.

மக்களின் பணம் தவறான வழியில் பயன்படுத்தப்படுகின்றது , எங்களிடம் முறையான நிதிபரிபாலன திட்டமொன்றிருக்கின்றது என கூக்குரலிடுகின்ற ஜேவிபி குறித்த அமைச்சரவை பத்திரம் தொடர்பில் இதுவரை வாய்மூடி மௌனியாக ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார முன்னேற்பாடுகளுக்கு வழிவிட்டு நிற்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment