மலேசியாவுக்கு 65 ரோஹிங்கியா முஸ்லீம்களை கடத்த முயற்சி: தாய்லாந்தில் விபத்துக்குள்ளான படகு
மியான்மரிலிருந்து மலேசியாவுக்கு 65 ரோஹிங்கியா முஸ்லீம்களை கடத்த எடுக்கப்பட்ட முயற்சி, தாய்லாந்தின் தெற்கு கடல்பகுதியில் படகு விபத்துக்குள்ளானதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
இவர்களை கடத்துவதில் ஈடுபட்ட சங்கோம் பப்ஹான் என்னும் தாய்லாந்து படகோட்டி ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
2015 காலக்கட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் ரோஹிங்கியா முஸ்லீம்கள், மற்றும் வங்கதேசிகளை மலேசியாவுக்கு கடத்தும் முயற்சிகள் இதே கடல் பகுதியில் நடைபெற்றிருக்கின்றன. இப்போது, மீண்டும் அதே வழித்தடத்தில் இக்கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இதில் மீட்கப்பட்டுள்ள குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 65 ரோஹிங்கியா அகதிகளும் சதுன்(Satun) மாகாண காவல்துறை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
“இவர்களை மலேசியாவுக்கு அழைத்து செல்ல மியான்மரை சேர்ந்த ஒருவரால் படகோட்டிக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் (1 லட்சம் தாய்லாந்து பட்) கொடுக்கப்பட்டிருக்கின்றது,” என காவல்துறை ஜெனரல் சுச்சர்ட் தீராசவாத் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.
மீட்கப்பட்டுள்ள ரோஹிங்கியாக்கள் அகதிகளா அல்லது சட்டவிரோத தொழிலாளர்களா என்பதை கண்டறிய விசாரணையைத் தீவிரப்படுத்தமாறு தாய்லாந்து பிரதமர் பிரயூத் சன்-ஒ-சா அறிவுறுத்தியுள்ளதாக அரசின் பேச்சாளர் குறிப்பிட்டிருக்கிறார்.
0 comments :
Post a Comment