Thursday, June 6, 2019

அவுஸ்திரேலியாவும் இலங்கையில் 20 புலனாய்வாளர்களை களமிறக்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்ந்து பல வல்லரசுகள் தமது புலனாய்வாளர்கள் இலங்கையில் களமிறக்கியுள்ளதுடன் இதன் ஆபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்கு என்ற போர்வையில் அவுஸ்ரேலியா 20 புலனாய்வு நிபுணர்களை இலங்கையில் களமிறக்கியுள்ளமை வெளிவந்துள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பீற்றர் டட்டன் இத்தகவலை உறுதி செய்துள்ளார். நேற்றுமுன்தினம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது இந்த தகவலை வெளியிடடுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் :

'தீவிரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா புலனாய்வுக் குழுக்களுக்கு உதவுவதற்காக அவுஸ்ரேலியா 20 இற்கும் அதிகமான புலனாய்வு அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை இங்கு அனுப்பியுள்ளது.

அவர்கள் இப்போதும், சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தடயவியல் பக்கத்தில் அவுஸ்ரேலிய அதிகாரிகள் உதவி வருகின்றனர்.

மிகவிரைவாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்த உதவியை வழங்கினோம். அவுஸ்ரேலிய காவல்துறையின் ஊடாக, கொழும்பில் உள்ள அவுஸ்ரேலிய தூதரகம் இதற்கான பணிகளை ஒருங்கிணைக்கிறது.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment