சட்டத்தில் திருத்தம். பொய்யான செய்திகளை வெளியிட்டால் 10 லட்சம் அபராதம். 5 வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனை.
உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் குற்றவியல் சட்டம் மற்றும் குற்ற வழக்கு ஒழுங்கு விதிகளில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு இத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இனங்களுக்கிடையில் காணப்படும் நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையில் மற்றும் பாதுகாப்புப் படையினரின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்படும் உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசு தீர்மானித்துள்ளது. இதற்கேற்ற வகையில் குற்றவியல் சட்ட விதிகள் மற்றும் குற்றச் செயல் வழக்கு ஒழுங்கு விதிகளில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பாதுகாப்புத் தொடர்பான குழு, சட்டம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சிடம் கோரிக்கைவிடுத்திருந்தது.
இதற்கமைய இத்தவறுகள் தொடர்பில் குற்றவாளியாகும் ஒருவரிடம் அறவிடப்படும் தண்டப்பணத்தின் பெறுமதியை பத்து இலட்சம் ரூபாவாக நிர்ணயிப்பது அல்லது ஐந்து வருட காலத்துக்கு மேற்படாத சிறைத்தண்டனையை விதிப்பது அல்லது இரண்டு தண்டனைகளையும் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏதுவாக குற்றவியல் சட்டம் மற்றும் குற்ற வழக்கு ஒழுங்கு விதியில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பதில் நீதி அமைச்சர் என்ற ரீதியில் ரஞ்சித் மத்தும பண்டார சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டது. இதேவேளை, வெறுக்கத்தக்க பேச்சுக்களை முன்வைப்பவர்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கான சட்டத்திருத்தத்துக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அவ்வாறான பேச்சுக்களை வெ ளிப்படுத்தும் நபர்களுக்கான தண்டப்பணம் மற்றும் சிறைத்தண்டனை என்பவற்றை தீர்மானிக்கும் வகையில் குற்றவியல் சட்டம் மற்றும் குற்ற வழக்கு ஒழுங்கு விதியில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
0 comments :
Post a Comment