Thursday, May 30, 2019

மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும் - வடக்கு ஆளுநர்

மதத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கம் மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும். அது ஒவ்வொரு இலங்கை இஸ்லாமியருடைய ஆறாவது கடமையாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன் என ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மாகாண இப்தார் நிகழ்வு யாழ்ப்பாணம் மொகைதீன் ஜூம்மா பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை (28) மாலை இடம்பெற்ற வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தனது கருத்தில்

இஸ்லாம் என்ற அமைதியான மார்க்கம் அந்த மார்க்கத்தை அல்லாவிடமிருந்து நியாயம்பெற்ற ஜனசமூகம் என்ற ரீதியிலே உங்களுக்கிடையிலே உங்களிலிருந்து அடுத்தவருக்கெதிராக வன்முறை வரமுடியாது என்றே மௌளவி தெரிவித்தார். அப்படியாயின் அந்த உண்மையின் மறுபக்கம் என்ன? வன்முறையை யார் திட்டம் தீட்டுகின்றார்களோ உதவுகின்றார்களோ அதை ஊக்குவிக்கின்றார்களோ அவர்கள் கட்டாயமாக மார்க்கத்தை தழுவிய உண்மையான இஸ்லாமியராக இருக்க முடியாது என்ற உண்மை தான் வெளிப்படுகின்றது.

இஸ்லாமிய புத்திஜீவிகள் இஸ்லாமிய அரசியல் வாதிகள் இஸ்லாமிய நண்பர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து சொல்லவேண்டிய ஒரு கட்டாய செய்தியுண்டு. இலங்கை கத்தோலிக்கர்களுக்கும் இலங்கை பௌத்தர்களுக்கும் இலங்கை இந்துக்களுக்கும் உங்களிடமிருந்து நாங்கள் கேட்கவேண்டிய குரல் என்னவெனில் வன்முறை இஸ்லாம் மதத்தை தழுவியது அல்ல என்ற ஒரு சொல்லை ஒரு குடும்பமாக சொல்லவேண்டும் என்பதே ஆகும். அண்மையில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக மதத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கம் மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும். அது ஒவ்வொரு இலங்கை இஸ்லாமியருடைய ஆறாவது கடமையாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன் .

நீங்கள் எவ்வளவு அழுத்தமாக முறையிட்டு நேர்மையாக வன்முறைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கின்றீர்களோ அதே வேகத்தில் ஏற்பட்டுள்ள இந்த காயங்கள் குணமாகும் நல்ல சிந்தனை வளரும் என்று நான் நம்புகின்றேன். இவற்றை நீங்கள் செய்ய அல்லா உங்களுக்கு இதயத்தையும் சக்தியையும் கொடுப்பதற்கு நான் துவா செய்கின்றேன். இது நான் மட்டுமன்றி மேதகு ஜனாதிபதியும் உங்களிடம் கேட்டுக்கொள்வதாகும் . நீதியின் முன் யார் குற்றவாளி என்று நியமிக்கும் வரை எல்லோரும் சுதந்திரமானவர்களே என்றும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.










பாறுக் ஷிஹான்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com