ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சௌதி எச்சரித்ததான செய்தி முற்றிலும் போலியானது. மசூர் மௌலானா
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்களில் இருந்து சவூதி பிரஜைகளை பாதுகாக்க சவூதி வெளிவிவகார அமைச்சு முன்னெச்சரிக்கை இரகசியக் கடிதம் அனுப்பியதாக வெளிவரும் செய்திகள் போலியானது என்று இலங்கைக்கான மத்திய கிழக்குஆய்வாளர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா இன்று (05) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில்(4/21)மிலேச்சத்தனமான தற்கொலைக் குண்டுதாரிகளின் தாக்குதல்கள் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்னர், இத்தாக்குதல் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கும் வகையில் கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்திற்கு சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இரகசிய கடிதம் அனுப்பியதாக தற்போது ஒரு சில ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி போலியானதும், உண்மைக்கு புறம்பானதும் ஆகும்.
சவூதி அரசின் இலச்சினை பொறிக்கப்பட்டு லெபனானின் அல் அஹத் செய்தித் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இக்கடிதம் போலியாக தயார் செய்யப்பட்டுள்ளதுடன், இக்கடிதத்தில் இடப்பட்டிருக்கும் கையொப்பம் சவூதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் அல் அசாப் உடையது அல்ல எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டனர். இவர்களில் சவூதி அரசுக்கு சொந்தமான 'சவூதியா ஏர்லைன்ஸ்' இல் பணி புரியும் இரு சவூதி பிரஜைகளும் உள்ளடங்குவர்.
இப்படியான ஒரு சூழலில் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சு, இலங்கைக்கான சவூதி தூதரகத்திற்கு தனது நாட்டு மக்களை மாத்திரம் பொது இடங்களுக்குச் செல்லாமல் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு இரகசிய கடிதம் அனுப்பியதாக வெளிவரும் செய்திகள் அப்பட்டமான பொய்யாகும்.
அத்துடன் இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு அசாதாரண சம்பவங்களின் பின்னராக சவூதி அரேபியா தனது இலங்கைக்கான தூதரகத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக வெளிவந்த தகவல்களிலும் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை.
சவூதி அரேபியா ஒரு போதும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு அல்ல என்பதற்கு கடந்த கால வரலாறு சாட்சியம் கூறும். கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற அதே தினத்தில் சவூதியில் 'ஷுல்பி' எனும் இடத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
உடனடியாக தீவிரவாதிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்திய சவூதி அரசு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 35 பேருக்கு மரண தண்டனை விதித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது என அவர் மேலும் தெரிவித்தார்.
(எஸ்.அஷ்ரப்கான்)
0 comments :
Post a Comment