இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழித்ததற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றாராம் ஹிஸ்புல்லா.
கோழி தின்ற கள்ளனும் கூட நின்று உலாவுவான் என்றதோர் பேச்சு வழக்கு உண்டு. அதாவது கோழியை திருடித் தின்று விட்டு உடையான் தனது கோழியை தேடும்போது திருடித்தின்ற கள்ளனும் இணைந்து தேடி அலைவான் என்பது அதன் பொருள்.
அவ்வாறுதான் கிழக்கு மாகாண ஆழுனர் ஹிஸ்புல்லாவின் நடவடிக்கையும் அமைந்துள்ளது. இலங்கையில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளான தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகளை போஷித்து விட்டு நிலைமை மோசமானவுடன் அந்தர் பல்டி அடித்து அவர்கள் பயங்கரவாதிகள் எனக்கு எதுவுமே தெரியாது அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என நாடகமாடுகின்றார்.
அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபாலவை இன்று சாய்ந்தமருதுக்கு அழைத்து வந்த ஹிஸ்புல்லா : 'இலங்கையில் ஏற்பட்ட தீவிரவாதத்தை இரு கிழமைக்குள் அழித்து முஸ்லீம் மக்களுக்கு ஆறுதல் ஒன்றை பெற்றுக்கொடுத்தமைக்காக நன்றியை தெரிவிப்பதாக' தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாவினுடைய இன்றைய பேச்சில் தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக பௌத்த மேலாதிக்கத்திற்கு சாமரம் வீசுவதையும் முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை விலைகூறி விற்க தயாராவதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது.
முஸ்லிம் மக்களின் அரசியல் தலைமைகளில், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் முதிர்ச்சி பெற்றதோர் அரசியல்வாதியாக இந்தருணத்தில் தன்னை நிரூபித்துள்ளார். அடிப்படைவாதத்தை எதிர்க்கும் அவர் முஸ்லிம் மக்களின் நியாயமான வேண்டுதல்களுக்கும் அவர்களது நல்வாழ்வுக்கும் எந்த விட்டுக்கொடுப்பையும் மேற்கொள்ளாது நேர்த்தியான நகர்வுகளை மேற்கொள்கின்றார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி தீவிரவாத செயற்பாடுகளை முறியடிப்பதில் சாய்ந்தமருது மக்கள் அரசிற்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கிய ஒத்துழைப்பிற்காக நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.
ஜனாதிபதியிடம் இளைஞர்கள் யுவதிகள் தங்களது ஆதங்கங்களை குறிப்பிட்டு தீர்வுகளை வழங்குமாறு கேட்டனர். இளைஞர் யுவதிகளின் கருத்துக்களை செவிமடுத்த ஜனாதிபதி அதற்கு ஆக்கபூர்வமான பதில்களை வழங்கினார்.
இதனால் சபையில் இருந்த இளைஞர் யுவதிகள் எதிர்கால ஜனாதிபதி என கோஷம் எழுப்பினர்.
0 comments :
Post a Comment