Wednesday, May 15, 2019

முறைகேடான யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் தமிழரசுக் கட்சியின் கையாலகாத்தனமும்

அண்மையில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன அந்த வகையில் சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சின் செயலாளருக்காக ஒப்பமிட்டு அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் 23.04.2019 தொடக்கம் வைத்தியக் கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந் நியமனமானது 13வது அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் அமைந்துள்ளது எனலாம். காரணம் மத்திய அரசாங்கத்தின் ஆளுகையின் கீழ் உள்ள யாழ்போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிக்கொண்டு மாகாண சபைகளின் கீழ் வருகின்ற பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பதவியை பொறுப்பேற்றதன் மூலம் இந் நியமனமானது இரட்டை நியமனமாக அமைவதுடன் மாகாணத்தின் அதிகாராத்தை மத்தி பறித்தெடுப்பது போல் உள்ளது.

மேலும் இவ் முறையற்ற நியமனம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் முன்னாள் வடமாகாண எதிர்க் கட்சி தலைவர் தவராசா மற்றும் முன்னைநாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் வடக்கு மாகாண ஆளுனருக்கு நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் தங்களது ஆட்சேபனையை தெரிவித்திருந்தனர். இதை கருத்தில் கொண்ட வடக்கு மாகாண ஆளுனர் அவர்கள் இன் நியமனத்தை உடனடியாக இடை நிறுத்தும்படி மத்திய சுகாதார அமைச்சுக்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் மத்திய சுகாதார அமைச்சின் TCS/H/BF/15/891 இலக்க கடிதத்தின் பிரகாரம் அரசசேவைகள் ஆணைக்குழுவின் இலக்கம் HSC/PRO/BMAG/10/11/2017 மற்றும் 17.04.2019ம் திகதிய கடிதம் மூலம் சுகாதார திணைக்களத்தின் அனைத்து வைத்திய நிறுவனங்களுக்கும் பிரதி வைத்திய நிர்வாக தரத்திற்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன மேற்படி சுற்றறிக்கையின் 5ம் பந்தியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது 'சிரேஸ்ட வைத்திய நிரவாகத்தில் வெற்றிடமாக உள்ள நிறுவனங்களில் கடமைக்கு சமூகம் அழித்துள்ள பிரதி வைத்திய நிர்வாக தரத்தில் நிலையான உத்தியோகத்தர்களில் அந் நிறுவனத்தில் வெற்றிடமாக உள்ள சிரேஸ்ட வைத்திய நிர்வாக தர கடமைகளை பதில் கடமை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரான வசந்த பெரேரா அவர்களால் ஒப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

மேற்படி நிர்வாக ஒழுங்குக்கு அமையவே மத்திய சுகாதார அமைச்சின் அனுமதியுடனும் வடமாகாண ஆளுனரின் அனுமதியுடனும் கடந்த ஆறு மாதகாலமாக மருத்துவர் தேவநேசன் அவர்கள் யாழ் பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். இவர் மீது காழ்புணரச்சி கொண்ட ஒரு சில வைத்திய உத்தியோகத்தர்கள் வட மாகாண மருத்துவ மன்றம் என்ற பெயரில் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கி மத்திய சுகாதார அமைச்சரான ராஜிதசேனரத்னவுடன் நல்லுறவைப் பேணி மேற்படி மருத்துவர் சத்தியமூர்த்தியின் நியமனத்தை செய்துள்ளதாக அறியமுடிகிறது.

இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் கடமையாற்றும் நிலை உருவாகியுள்ளது. இது அரச நிர்வாக மற்றும் கணக்காய்வு சம்பந்தமான சட்ட சிக்கலை உருவாக்கியுள்ளது. மருத்துவர் சத்தியமூர்த்தியின் நியமனத்தை ஆளுனர் நிராகரித்ததன் மூலம் அவர் கடமை செய்வதற்கான உரித்தானது மாகாண பிரதம செயலாளர், மாகாண பிரதிப் பிரதம செயலாளர்(நிதி) ,வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோராலும் நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிந்தும் வைத்தியர் சத்தியமூர்த்தி 23.04.2019ல் இருந்து கடமையை பொறுப்பேற்று முறைகேடான வகையில் கடிதங்களில் கையொப்பம் இடல், கலந்துரையாடல்களை ஒழுங்கமைத்தல் மற்றும் யாழ் மாவட்டத்தில் உள்ள வைத்திய சாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது அனைவராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களில் ரணில் தலமையிலான அரசை காப்பாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் சென்று அரசை காப்பாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனாலும், அரசிற்கு இன்றும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிகொண்டிருக்கும் கூட்டமைப்பின் பதின்நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களாலும் இன் நியமனத்தை நிறுத்தமுடியாமல் போனது? இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பு மௌனம் காப்பது மாகாணத்தின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசின் நிகழ்சி நிரலுக்கு இக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையா என்ற கேள்வி எழுகிறது.

இது இவ்வாறு இருக்கையில் 13.05.2019 திங்கட்கிழமை அன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நடந்த கூட்டத்தில் மருத்துவர் சத்தியமூர்த்தி நான்தான் பணிப்பாளர் என்றும் நீங்கள் பிரதிப்பணிப்பாளர் என்று மருத்துவர் தேவநேசனைப் பார்த்து எச்சரித்திருந்தார். இதற்கு பதிலளித்த மருத்துவர் தேவநேசன் அவர்கள் வட மாகாண ஆளுனரால் தங்களுக்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தை காட்டமுடியுமா? என கூறினார் இதற்கு பதிலளித்த வைத்தியர் சத்தியமூர்த்தி மாகாணத்தின் அனுமதி தேவையில்லையெனவும் மத்திய அரசாங்கத்தின் கடிதம் போதும் எனவும் ஆளுனராலும் எந்த அரசியல்வாதிகளாலும் என் இந் நியமனத்தை இடை நிறுத்தமுடியாது என கடும் தொனியில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன் நிலையில் வடமாகாண சபையின் அதிகாரங்களை எந்த அரசியல்வாதிகள் பாதுகாக்க போகின்றார்கள் அல்லது வடமாகாண ஆளுனரும் அவருக்குட்பட்ட அதிகாரிகளும் காப்பாற்ற போகின்றார்களா என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்? மேலும் இவ்விடயம் தொடர்பாக ஆளுனராலும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனாலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment